×

கேள்விகுறியான சுகாதாரம் காரைக்குடியை மிரட்டும் மர்ம காய்ச்சல்

*டெங்கு அச்சத்தில் மக்கள்

காரைக்குடி :  காரைக்குடி பகுதியில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அடிப்படை சுகாதாரம் கேள்விகுறியாக உள்ளது. மாவட்டத்தில் காரைக்குடி நகராட்சி வளர்ந்து வரும் பகுதியாக உள்ளது. இரண்டாம் நிலை நகராட்சியான இந் நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 36 வார்டுகள் கொண்ட இந்த நகராட்சியில் கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1 லட்சத்து 6 ஆயிரத்து 793 பேர் உள்ளனர். சிறிய மற்றும் பெரிய அளவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தெருக்களும், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.

மழைநீர் செல்லக் கூடிய வரத்து வாய்க்கால்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பாளர்களால் அடைக்கப்பட்டுள்ளது. நகரின் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் இல்லை. வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் தெட்டி அமைக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது. பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் சாலைகளில் தான் சங்கமம் ஆகிறது. கட்டப்பட்டுள்ள கழிவுநீர் கால்வாய்களும் பல்வேறு பகுதிகளில் முறையாக இல்லாததால் ஆங்காங்கே தேங்கி கொசு வளரும் மையங்களாக மாறி உள்ளது.

சாலைகள் முழுவதும் குண்டும், குழியுமாக உள்ளதால் மழைநீர் தேங்கும் நிலை உள்ளது. இதில் கொசு வளர அதிகளவில் வாய்ப்புள்ளது. நகர் பகுதிகள் முழுவதும் காலியிடங்கள் அதிகமாக உள்ளது. இங்கு மண்டி கிடக்கும் புதர்கள் கொசு வளர ஏதுவாக அமைகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு காலியிடங்களில் உள்ள முட்புதர்கள் மற்றும் குப்பைகளை அகற்றாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இத்திட்டம் தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.

கால்வாய்கள் அடைத்து கிடப்பது, வீடுகளுக்கு முன்பு தேங்கி கிடக்கும் கழிவுநீர் போன்ற பல்வேறு காரணங்களால் நாளுக்கு நாள் கொசு பிரச்னை அதிகரித்து வருகிறது. இதனால் கொசுவின் மூலம் பரவும் பல்வேறு வகையாக நோய்கள் நகர் பகுதி முழுவதும் பரவி வருகிறது. நகராட்சிக்கு உட்பட்ட காளவாய்பொட்டல், ந.புதூர், கழனிவாசல், மேலவாய்க்கால் ஊரணி, அழகப்பாபுரம் பகுதிகளை சேர்ந்தவர்களும், தவிர பேயன்பட்டி, பாதரகுடி, கண்டனூர் பகுதியை சேர்ந்தவர்கள் அரசு மருத்துவமனையில் மர்ம காய்ச்சல் பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளனர்.

இவர்களுக்கு டெங்கு பாதிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சீசன் நேரத்தில் மட்டும் நடவடிக்கை எடுக்கும் நகராட்சி நிர்வாகம் காய்ச்சல் பரவுவதற்கு முன்பே நடவடிக்கை எடுப்பது இல்லை. கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற இதுவரை நடவடிக்கை இல்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

Tags : Karaikudi. Karaikudi , Karaikudi ,Mysterious fever,fever,Karaikudi
× RELATED காரைக்குடியில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் ரோடு ஷோ ரத்து!