×

திண்டுக்கல் அருகே பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த அடையாளங்கள் கண்டுபிடிப்பு

தேனி : திண்டுக்கல் அருகே மலையடிவாரத்தில் பெருங்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளமாக 5 கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன.தேனி மாவட்டம், போடியில் உள்ள சிபிஏ கல்லூரியின் வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர்கள் மாணிக்கராஜ், கருப்பசாமி, ஆய்வு மாணவர் ராம்குமார், நெல்லூர் கள்ளர் அரசு பள்ளியின் வரலாற்று ஆசிரியர் கருப்பையா கொண்ட குழு, திண்டுக்கல் அருகே நரசிங்கபுரத்தில் உள்ள மலையடிவாரத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கொம்மங்கரடு என்று அழைக்கப்படும் மலையடிவாரப்பகுதியில் கலப்பு வாய்க்கால் ஓடையின் கரையில் உள்ள தரிசுநிலத்தில் களஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு பெருங்கற்காலத்தினை சேர்ந்த 5 கல்வட்டங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து போடி சிபிஏ கல்லூரி உதவி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறியதாவது: கல்வட்டம் என்பது தரையின் கீழ் பகுதியில் குழியைத் தோண்டி, நான்கு பக்கமும் பலகை கற்களை ஒன்றுடன் ஒன்றை இணைத்து சதுரமான அல்லது செவ்வகமான வடிவத்தில் நிறுத்தி, ஒரு கல்லறை போன்ற தோற்றத்தில் அமைப்பர். அதன் கீழ் பகுதியிலும், மேல் பகுதியிலும் பெரிய பலகை கற்களை கொண்டு மூடப்பட்டிருக்கும். இந்த கல்வட்டங்களில் முதுமக்கள் தாழிகள் மற்றும் ஈமப்பொருள்களோடு தொடர்புடைய மண்பாண்டங்களும் வைக்கப்பட்டிருக்கும்.

பின்னர் மண்கற்களை கொண்டு மூடிவிடுவர். இக்குழியை சுற்றிலும் இயற்கையில் கிடைக்கும் உருண்டையான அல்லது சீரற்ற பெரிய கற்களை வட்ட வடிவில் அடையாளப்படுத்துவார்கள். இதனையே கல்வட்டம் என்பர். இக்கல்வட்டங்கள் இறந்தவர்களை புதைத்த இடத்தை அடையாளப்படுத்தவும், பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டவை. இதுபோன்ற கல்வட்டங்கள் கொம்மங்கரடு அருகே உள்ள தரிசு நிலத்தில் 5 உள்ளன. ஒவ்வொன்றிற்கும் 5 மீட்டர் இடைவெளி உள்ளது. இவ்வட்டத்தின் உள்ளே முதுமக்கள் தாழிகள் இறந்தவரோடு தொடர்புடைய பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன.

பெருங்கற்கால கல்வட்டங்கள் உள்ள இடத்தில், எல்லாம் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்வட்டங்களே இருந்துள்ளன என்பதற்கு இங்கு கிடைத்துள்ள கல்வட்டங்களும் சாட்சியாக உள்ளன. மலையும், மலை சார்ந்த இடங்களில்தான் பெருங்கற்கால கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், நரசிங்கபுரம் அருகே கொம்மங்கரடு தரிசு நிலமும் மலையடிவாரத்தில் மலையும் மலைசார்ந்த நிலத்தில் கல்வட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இக்கல்வட்டங்கள் மூலம் இப்பகுதியில் பெருங்கற்கால மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதனை காட்டுகிறது.இவ்வாறு தெரிவித்தார்.

Tags : landmarks ,Dindigul. , Dindigul,great people,Theni,Bodi,landmarks
× RELATED திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு...