×

சென்னையில் 60 இடங்களில் கொள்ளை; இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் லஞ்சம்: விசாரணையில் முருகன் பகீர் வாக்குமூலம்

பெங்களூரு: சென்னையில் 60 இடங்களில் கொள்ளையடித்ததாக திருவாரூர் முருகன் பரபரப்பு வாக்குமூலம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எந்தெந்த இடங்கள் என்ற விவரத்தையும் அவன் பெங்களூரு போலீசாரிடம் பட்டியலிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புழல் மற்றும் திருச்சி சிறையில் இருந்தபடியே இதற்கான திட்டங்களை வகுத்து 7 பேர் மூலம் செயல்படுத்தியதாகவும் கூறியுள்ளான். திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் முருகன் வேறு ஒரு வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்தான். அவனை பெங்களூரு போலீசார் இரண்டாவது முறையாக காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொம்மனாகலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுமார் 5 கோடி ரூபாய் கொள்ளையடித்த வழக்கில் அவனை 7 நாள் காவலில் எடுத்து பெங்களூரு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், முருகனை ரகசியமாக திருச்சிக்கு அழைத்து வந்து காவிரி கரையோரம் பதுக்கி வைக்கப்பட்ட லலிதா ஜுவல்லரியில் கடையில் கொள்ளையடித்த நகைகளை பெங்களூரு போலீசார் மீட்டுள்ளனர். மேலும் முருகன் மீது, கர்நாடகாவில் சுமார் 100 இடங்களில் கொள்ளையடித்த வழக்குகள் நிலுவையில் உள்ளன. அது தொடர்பாகவும் முருகனிடம் விசாரிக்க வேண்டும் என பெங்களூரு போலீசார் தெரிவித்துள்ளனர். அதேபோல சென்னையில் எந்தந்த இடங்களில் கொள்ளையடிக்கப்பட்டது என்ற விவரங்களை பெங்களூரு போலீசிடம் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சென்னை மாநகர பகுதியில் சுமார் 60 இடங்களில் கொள்ளையடித்ததாக முருகன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். அண்ணாநகர், கே.கே.நகர், திருமங்கலம், அமைந்தகரை ஆகிய இடங்களில் கைவரிசை கட்டியதாகவும் முருகன் தெரிவித்துள்ளான்.

இந்த கொள்ளைக்கான திட்டங்களை சென்னை புழல் சிறை மற்றும் திருச்சி சிறையில் இருந்த போது வகுத்ததாக கூறியுள்ளான். இதற்காக 7 பேர் கொண்ட கும்பலை அமைத்ததாகவும், அவர்கள் மூலம் கொள்ளை சம்பவங்களை செயல்படுத்தியதாகவும் முருகன் கூறியுள்ளான். சென்னையில் கொள்ளையடித்த நகை பணம் ஆகியவற்றை முருகன் தற்போது வைத்திருக்கிறானா? அல்லது உல்லாசமாக இருக்க அவற்றை செலவழித்துவிட்டானா? என விசாரணை நடைபெற்று வருகிறது. அதுமட்டுமல்லாது, சென்னையில் கொள்ளையடித்த பணத்தில் போலீசாருக்கும் பங்கு இருப்பதாக முருகன் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளான். அதில், கொள்ளை சம்பவத்தில் உதவுவதற்கு மாநகர காவல்துறையில் பணியாற்றிவரும் இன்ஸ்பெக்டருக்கு 30 லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுத்ததாக தெரிவித்துள்ளான்.

Tags : Robbery ,places ,Murugan Bhagir ,Inspector ,confession Inspector ,Chennai , Murugan, Loot, Lalitha Jewelery, Bangalore, Inquiry, Madras, Inspector, Bribery, Affidavit
× RELATED கொடைக்கானலில் குடியிருப்புக்குள் புகுந்தது காட்டு மாடுகள்