×

ஜம்மு காஷ்மீரில் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மேலவை கலைக்கப்பட்டது: பொது நிர்வாகத்துறை அறிவிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதால் அம்மாநில மேலவை கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் பொதுத்துறை நிர்வாகத்தின் செயலாளர் பரூக் அகமது லோன் பிறப்பித்துள்ள உத்தரவில் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தின்படி மேலவை கலைக்கப்பட்டதாக கூறியுள்ளார். அதில், மறுசீரமைப்பு சட்டம் விதி 54-ன் படி, ஜம்மு-காஷ்மீரில் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சட்ட மேலவையை கலைப்பதற்கான உத்தரவை பொது நிர்வாகத்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, சட்ட மேலவையில் பணியாற்றிவந்த 116 ஊழியர்களும், வரும் 22-ம் தேதியில் இருந்து தங்கள் வருகையை பொது நிர்வாகத் துறையிடம் பதிவு செய்ய வேண்டும் என்றும், ஜம்மு-காஷ்மீர் மேலவை செயலாளர், தனது கட்டுப்பாட்டில் உள்ள சட்டம் ஒழுங்கு, வணிகம், சட்டசபை விவகாரங்கள் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் சட்டசபை செயலகத்திடம் ஒப்படைக்கவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு சலுகை அளித்த சட்டப்பிரிவு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது. மேலும், லடாக் பகுதி, சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், ஜம்மு-காஷ்மீர், சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த மாத இறுதியில் 2 யூனியன் பிரதேசங்களும் தனித்தனி நிர்வாகங்களாக செயல்பட உள்ளன. ஜாமுன் காஷ்மீர் மேலவையில் 36 உறுப்பினர்கள் இருந்து வந்தனர். சட்டப்பேரவையில் 85 உறுப்பினர்கள் இருந்து வந்தனர்.

Tags : announcement ,Public Administration Department ,Jammu ,Kashmir , Jammu and Kashmir, Public Administration Department
× RELATED நாட்டில் வலுவான அரசாங்கத்தை...