உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கக் கோரி மத்திய அரசுக்கு பரிந்துரை

புதுடெல்லி: உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.பாப்டேவை நியமிக்கக் கோரி மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்துள்ளார். உச்சநீதிமன்ற தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயின் பரிந்துரையை சட்ட அமைச்சகம் பரிசீலித்து குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். அயோத்தி வழக்கில் தீர்ப்பு அளித்துவிட்டு நவம்பர் 17-ம் தேதி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக நாக்பூரை சேர்ந்த சரத் அரவிந்த பாப்டே பணியாற்றி வருகிறார். நாக்பூர் பல்கலையில் சட்டம் பயின்ற பாப்டே மகாராஷ்ட்ரா உயர்நீதிமன்றத்தில் 1978-ம் ஆண்டு வழக்கறிஞர் பணியை தொடங்கினார்.

உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞராக பணியாற்றிய போது மகாராஷ்ட்ரா உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். பின்னர் 2012-ம் ஆண்டு மத்தியபிரதேச மாநில உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்றார். உச்சநீதிமன்றத்தின் 47-வது தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள எஸ்.ஏ.பாப்டே 2021-ம் ஆண்டு ஏப்ரல் வரை பணியில் நீடிப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: