நீலகிரியில் நிலச்சரிவு; குந்தா தாலுக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை; மலை ரயில் 3 நாட்களுக்கு நிறுத்தம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் கோத்தகிரி, குன்னூர், குந்தா உள்ளிட்ட இடங்களிலும் மண் சரிவும், மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உதகமண்டலம் மஞ்சூர் சாலையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டுள்ளன. இதில் குந்தா அருகே சாலையோரம் உளள மரங்கள் வேரோடு சாய்ந்ததால் போக்குவரத்தில் தடை ஏற்பட்டுள்ளது. இவற்றை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் குந்தா தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையின் தாக்கம் அதிகமானால் பாதிப்புகள் கடுமையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை எதிர்கொள்ள 15 ஜேசிபி இயந்திரங்கள், மணல் மூட்டைகள், ஊழியர்கள் தயார் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரியில் கனமழை தொடர்வதால் மண் சரிவு மற்றும் மரங்கள் சாயும் அபாயம் இருப்பதால் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகமண்டலம் வரை செல்லும் நீலகிரி மலை ரயில் இன்று முதல் 3 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளது. குன்னூர் - உதகை இடையே மலை ரயில் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குந்தாவில் 12 செ.மீ. மழை பதிவு

நீலகிரி மாவட்டம் குந்தாவில் 12 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. கெட்டை - 10.9 செ.மீ., அவலாஞ்சி, கின்னக்ககோரையில் 9 செ.மீ., உப்பர்பவானி 7.4. செ.மீ., எமரால்டு 6.6. செ.மீ. மழை பெய்துள்ளது.

Related Stories: