டெல்லி சாலை ஓட்டைகளை 24 மணி நேரத்தில் சீரமைக்க வேண்டும்: முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவு

புதுடெல்லி: டெல்லி சாலைகளில் உள்ள ஓட்டைகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் சீரமைக்க வேண்டும் என்று முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் கூறியதாவது: டெல்லி முழுவதும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 1,260 கிமீ சாலைகளை ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு நடத்தினர். அப்போது 232 பெரிய பள்ளங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த பள்ளங்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் சீரமைக்க உத்தரவிட்டுள்ளேன். மேலும் ஒட்டுமொத்த சாலைகளை சீரமைக்கும் பணி நவம்பர் இறுதியில் நிறைவடையும்.

பேட்ஜ் ஓர்க் செய்ய வேண்டிய அளவுக்கு 283 பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த பணிகளை அக்டோபர் 31க்குள் முடிக்க  உத்தரவிட்டுள்ளேன். மாற்றி அமைக்க வேண்டிய சாலைப்பணிகளாக 272 பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அந்த பணிகளை நவம்பர் 30க்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளேன்.பல்வேறு பணிகளுக்காக 392 இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த பணிகளை மேற்கொள்வது குறித்தும், அதை சரிசெய்வது குறித்தும் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்ளும் துறை அதிகாரிகளுடன் அக்டோபர் 24ல் ஆய்வு கூட்டம் நடைபெறும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: