×

பதிவெண் அடிப்படை கார் இயக்கம் வாடகைக்கு 2,000 சிஎன்ஜி பஸ் : ஆம் ஆத்மி அரசு அறிவிப்பு

புதுடெல்லி: பதிவெண் அடிப்படை கார் இயக்கம் அமலாகும் சமயத்தில், சிஎன்ஜி எரிபொருளில் செயல்படும் 2,000 பஸ் வாடகைக்கு தலைநகரில் இயக்கப்படும் என ஆம் ஆத்மி அரசு அறிவித்து உள்ளது.டெல்லி அமைச்சரவை கூட்டம் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் நேற்று நடைபெற்றது. அப்போது வரும் 4ம் தேதி தொடங்கப்பட உள்ள கார் இயக்க திட்டம் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. சாலைகளில் கார் எண்ணிக்கை குறையும் என்பதால், அதனை ஈடுகட்டும் விதமாக பஸ் எண்ணிக்கையை அதிகரிப்பு செய்ய வேண்டும் என அமைச்சர்கள் தெரிவித்தனர். அதோடு அந்த பஸ்களும் இயற்கை எரிபொருளில் இயங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்றும், டீசல் இயக்கம் என்றால் திட்டம் அறிவித்து பயனில்லை எனவும் அமைச்சர்கள் பலரும் யோசனை கூறினர்.

அதையடுத்து, திட்டம் அமலில் இருக்கும் 4ம் தேதி தொடங்கி 15ம் தேதி வரை வாடகைக்கு சிஎன்ஜியில் இயங்கும் 2,000 பஸ் அறிமுகம் செய்யலாம் எனக் கூறப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையில் ஏகமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. பஸ்சை வாடகைக்கு எடுக்கும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தும்படி போக்குவரத்து துறைக்கு முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.வாடகை பஸ்களின் இருக்கை எண்ணிக்கை உள்பட் பல்வேறு வசதிகளை கணக்கிட்டு கிலோமீட்டருக்கு குறைந்தபட்சமாக ₹32.54 மற்றும் அதிகபட்சமாக ₹49.42 என கட்டணம் நிர்ணயிக்க போக்குவரத்து துறையின் கட்டண நிர்ணய கமிட்டியினர் தீர்மானித்து உள்ளனர். வாடகை பஸ்களில் கண்டக்டர்களாக அரசு போக்குவரத்து ஊழியர்கள் அமர்த்தப்பட உள்ளனர். டிரைவரை தனியார் பஸ் நிறுவனங்களை அமர்த்த வேண்டும்.இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கார் இயக்கம் முன்பு அமலாகி இருந்த போது, வாடகைக்கு பஸ் அளித்த உரிமையாளர்கள் மற்றும் புதிதாக உருவாகி உள்ள பஸ் நிறுவனங்களுக்கு விரைவில் வாடகை பஸ் ஒப்பந்த அறிவிப்பு வெளியாகும்’’, எனக் கூறியுள்ளார். தற்போது அரசு போக்குவரத்து மற்றும் கிளஸ்டர் பஸ் என 5,500 எண்ணிக்கையில் உள்ள பஸ், கார் இயக்கத்தின் போது 2,000 வாடகை பஸ் சேர்ந்து 7,500 ஆக இருக்கும்.

Tags : government announcement , car,CNG bus,Aam Aadmi ,Government
× RELATED கூட்டுறவு உதவியாளர்‌ தேர்வுக்கான...