வரும் சட்டமன்ற தேர்தலை சுதந்திர போராட்டமாக கருத வேண்டும் : தொண்டர்கள் மத்தியில் கெஜ்ரிவால் உரை

புதுடெல்லி: நாட்டின் இன்றைய அரசியல் சூழலில் நாம் தான் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளோம் எனக் கூறியுள்ள ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், வரும் சட்டமன்ற தேர்தலை மற்றொரு சுதந்திர போராட்டமாக கருதும்படி கட்சி தொண்டர்களுக்கு வலியுறுத்தி உள்ளார்.அடுத்த ஆண்டு பிப்ரவரியில் எதிர்பார்க்கப்படும் டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வியூகம் அமைத்து செயல்பட கெஜ்ரிவால் பரபரப்பாக இயங்கத் தொடங்கி உள்ளார். தேர்தல் தொடர்பான ரகசிய ஆலோசனை கூட்டங்களையும் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் அவர் நடத்தி வருகிறார். மாநிலத்தின் 70 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என ஆலோசனை கூட்டங்களில் கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார். மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் தொண்டர்களை சந்திக்கும் முயற்சியை கெஜ்ரிவால் துவக்கி உள்ளார். முதல் கூட்டம் துவாரகாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையை துவக்கிய கெஜ்ரிவால் ‘பாரத் மாதா கி ஜெய், இன்குலாப் ஜிந்தாபாத்’, என கோஷம் முழங்கினார். உரையை முடித்த போதும் மீண்டும் அதே கோஷத்துடன் முடித்தார். உரையில் கெஜ்ரிவால் கூறியிருப்பதாவது:நான் உயிருடன் இருக்கும் வரை கட்சியிலும், டெல்லியில் ஆம் ஆத்மி அரசிலும் ஊழல் என்ற பேச்சுக்கு  இடமில்லை என உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்.

சுதந்திர போராட்டமாக வரும் சட்டப்பேரவை தேர்தலை நாம் கருத வேண்டும். ஆம் ஆத்மி கட்சிக்காகவோ அல்லது கெஜ்ரிவால் எனும் தனிப்பட்ட நபருக்காகவோ தேர்தலில் யாரும் போராட வேண்டாம். சுதந்திர போராட்டம் எனும் தீவிர உணர்ச்சியுடன் இந்த தேர்தலை நீங்கள் எதிர் கொள்ள வேண்டும். நடப்பு அரசியல் சூழ்நிலையில் நமது கட்சிதான் நம்பிக்கை நட்சத்திரமாக நாட்டில் உள்ளது. தேர்தலில் ஒரு வேளை தோற்க நேரிட்டாலும், ஆம் ஆத்மி கட்சியால் மீண்டெழ முடியாது எனும் நம்பிக்கையும் பொய்க்க வேண்டும்.

 தேர்தலில் நாம் தோல்வி காண நேரிடுவது, மக்களுக்கு நாம் வழங்கியுள்ள அனைத்து நல திட்ட பலன்களும் ரத்தாகக் கூடும் என்ற நிலை ஏற்படும். அன்னா ஹசாரேவின் அறிவுரைகளை தொண்டர்கள் பின்பற்ற வேண்டும். தனி நபரை தாக்கி செய்யப்படும் விமர்சனங்கள் குறித்து தொண்டர்கள் கவலைப்பட வேண்டாம். எனக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கூறும் கருத்துகள் குறித்து ஒவ்வொரு நாளும் நான் கவலைப்பட்டால், அடுத்த 24 மணி நேரத்தில் மன நோயாளி ஆகிவிடுவேன். எனவே, எதிர்ப்பு கருத்துகளை பொருட்படுத்தக் கூடாது. அதே சமயம் நாட்டின் பெருமைக்கு பாதிப்பு ஏற்படாமல் பாதுகாப்பது நமக்கு அவசியம். இவ்வாறு பேசினார்.

பாஜவின் சுயரூபம்

பருவநிலை மாற்றங்கள் குறித்த சி-40 மாநாடு டென்மார் தலைநகர் கோபன்ஹேகனில் 11ம் தேதி தொடங்கியது. 8 பேர் கொண்ட குழுவுடன் மாநாட்டில் கலந்து கொள்வேன் என கெஜ்ரிவால் முன்னதாக கூறியிருந்தார். மத்திய அரசு அனுமதி அளிக்காததால், பயணம் ரத்தானது. மேயர்கள் மாநாட்டில் முதல்வர் கலந்து கொள்ள அனுமதிக்க முடியாது என மத்திய அரசு கூறியது. பயணத்தை ரத்து செய்த கெஜ்ரிவால், டெல்லியில் இருந்தபடி மாநாட்டில் வீடியோ கான்பரன்சிங் முறையில் உரையாற்றினார். அனுமதி மறுத்ததை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக சாடியிருந்தது. கெஜ்ரிவால் அப்போது எதுவும் கூறியிருக்கவில்லை.

இந்நிலையில், துவாரகா கட்சித் தொண்டர்கள் சந்திப்பில் இது பற்றி கெஜ்ரிவால் கூறியிருப்பது:பாஜவின் சுயரூபம் உலகிற்கு வெளிப்பட்டு உள்ளது. வெளிநாடு செல்ல விடாமல் பாஜ என்னை தடுத்தது. ஆனால், மாநாட்டு அமைப்பாளர்கள் என்னை வீடியோ கான்பரன்சில் பேச அழைப்பு விடுத்தனர். இது எனக்கு கிடைத்த பெருமை அல்ல. கட்சித் தொண்டர்களான உங்களுக்கு கிடைத்த பெருமிதம். மேயர்கள் மாநாட்டில் முதல்வர் செல்வதா என பாஜ தலைவர்கள் கிண்டலடித்தனர். பாஜவினர் மேயராக இருந்தபோது அவர்களுக்கு இந்த அழைப்பு கிடைத்ததா? உலகமே எங்களை பற்றி வியந்து பேசுகிறது. பாஜ எந்த மாதிரி கட்சி என்பதை ஒட்டு மொத்த உலகும் அறிந்துள்ளது. எங்களது வளர்ச்சிப் பணிகள் உலகில் பாராட்டப்படுகிறது.இவ்வாறு கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Related Stories: