தொடரும் தட்டுப்பாடு எதிரொலி கூடுதலாக 10 லாரி வெங்காயம் சப்ளை செய்ய வேண்டும்: மத்திய அரசுக்கு அமைச்சர் இம்ரான் ஹூசைன் வலியுறுத்தல்

புதுடெல்லி: சமையலறை அத்தியாவசிய பொருளான வெங்காயம் தேவையை, இந்திய தேசிய விவசாய கூட்டுறவு மார்க்கெட் கூட்டமைப்பால் (என்ஏஎப்இடி) பூர்த்தி செய்ய முடியவில்லை எனக் குறை தெரிவித்துள்ள அமைச்சர் இம்ரான் ஹுசைன், மத்திய அரசு கூடுதலாக சப்ளை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.மகாராஷ்டிரா, கருநாடகா மாநிலங்களில் பேய்மழையில் மூழ்கியதை அடுத்து வெங்காய பயிர்கள் வெள்ளத்தில் கடந்த மாத தொடக்கத்தில் முற்றிலும் அழுகி வீணானது. அதையடுத்து வெங்காய தட்டுப்பாடு டெல்லி மாநிலத்தில் அதிகரித்தது. வெங்காயம் விலை கிலோ ₹80க்கும் அதிகமாக விற்கப்பட்டதால் மக்கள் தத்தளித்தனர்.எனவே, மத்திய அரசின் என்ஏஎப்இடி மூலமாக வெங்காயத்தை நியாய விலைக்கு ஆம் ஆத்மி அரசு கொள்முதல் செய்து, அதையே 23.90க்கு மாநிலத்தின் சட்டப்பேரவை தொகுதிகள் 70லும் உள்ள ரேஷன் கடைகள் மற்றும் 250 நடமாடும் வாகனங்களிலும் மக்களுக்கு விநியோகம் செய்தது.

அப்படி இருந்தும் வெங்காயம் பற்றாக்குறை தீரவில்லை. மேலும், தக்காளியும் மழையில் அழுகி, அதன் விலையும் ₹80ஐ தாண்டியது. அதனால் மக்கள் கடுமையான திண்டாட்டம் அடைந்தனர்.அதையடுத்து  மாநில உணவு வழங்கல் கூட்டுறவு துறை மற்றும் என்ஏஎப்இடி மூத்த அதிகாரிகளுடன் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் சப்ளை அமைச்சர் இம்ரான் ஹுசைன் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து, தட்டுப்பாடு இல்லாமல் சப்ளை செய்வதற்கான மாற்று ஏற்பாடுகளில் கவனம் செலுத்தும்படி அமைச்சர் உத்தரவிட்டார். மேலும், 250 என உள்ள நடமாடும் வாகனங்கள் எண்ணிக்கையை 400ஆக அதிகரிக்கவும் அவர் கூறியுள்ளார்.இந்நிலையில், என்ஏஎப்இடி சப்ளை செய்யும் வெங்காயம் போதவில்லை எனக் குறை தெரிவித்து, கூடுதலாக சப்ளை செய்யும்படியும் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வானுக்கு மாநில உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் அமைச்சர் இம்ரான் ஹுசைன் கடிதம் அனுப்பி வலியுறுத்தி உள்ளார்.இது தொடர்பாக ஹுசைன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:என்ஏஎப்இடியின் தற்போதைய சப்ளை மக்களின் தேவையை பூர்த்தி செய்யவில்லை. எனவே, தினமும் மேலும் 10 லாரிகளில் வெங்காயம் சப்ளை செய்ய என்ஏஎப்இடிக்கு உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் மத்திய அமைச்சர் உத்தரவிடு மக்களின் தேவையை நிறைவேற்றும்படி வலியுறுத்துகிறேன்.இவ்வாறு கடிதத்தில் ஹுசைன் கூறியுள்ளார்.

Related Stories: