சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுகவை கைப்பற்றுவது சசிகலாவின் லட்சியம்: டெல்லியில் அமமுக வக்கீல் தகவல்

புதுடெல்லி: சிறையில் இருந்து வந்தவுடன் அதிமுகவை மீட்பது தான் சசிகலாவின் முக்கிய லட்சியம் என அமமுக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் கூறினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா பெங்களரூ  பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக அதிமுக சார்பில் தேர்வான எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் தர்மயுத்தம் நடத்திய ஓ.பன்னீர்செல்வத்துக்கு கட்சியில் தலைமை  ஒருங்கிணைப்பாளர், துணை முதல்வர் ஆகிய பதவிகள் தரப்பட்டது. தற்போது இவர்கள் ஒருங்கிணைந்து கட்சி மற்றும் ஆட்சியை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் டிடிவி.தினகரன் அமமுக என துவக்கி தனியாக செயல்பட்டு வருகிறார்.  மேலும் அவர் தன் கட்சியை தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருந்தார்.

இதற்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனை அடிப்படையாக கொண்டு அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பிடமும் விசாரணை  மேற்கொள்ள தேர்தல் ஆணையத்தின் தரப்பில் நேற்று அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து டிடிவி.தினகரனின் அமமுக சார்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் நேற்று ஆணையத்தின் விசாரணையில் நேரில் ஆஜராகிருந்தார்.  இந்நிலையில், நிருபர்களிடம் அவர் கூறும்போது,”மறைந்த தலைவர் ஜெயலலிதா என்பவர் ஒரு பொதுவான தலைவர். அதனால் அவரது பெயரான அம்மா என்ற வார்த்தையை பயன்படுத்த யாருக்கும் வேண்டுமானாலும் உரிமை உண்டு.  அடுத்த விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அதிமுக தரப்பு வாதங்கள் நடைபெறும். இதில் எங்களது வாதங்களை அடிப்படையாக கொண்டு கட்சி அங்கீகாரத்தை ஆணையம் வழங்கும் என நம்புகிறோம்.  இதில் குறிப்பாக பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலாவின் முக்கிய லட்சியமே அதிமுகவை கைப்பற்றுவதுதான். அதில் எந்த மாற்றமும் கிடையாது என அவர் கூறினார்.

Related Stories: