நீ என்ன பெரிய பிஸ்தாவா? சிங்கத்தின் முன் நின்று சவால் விட்ட ஆசாமி

புதுடெல்லி: டெல்லி உயிரியல் பூங்காவில் சிங்கத்தின் முன் நேருக்கு நேர் போய் நின்ற வாலிபரை ஊழியர்கள் பத்திரமாக மீட்டனர். பீகார் மாநில கிழக்கு சம்பரன் மாவட்டத்தை சேர்ந்த ரேஹன் கான்(28), பிழைப்பு தேடி தலைநகர் வந்து  வடகிழக்கு டெல்லி சீலாம்பூரில் தங்கியுள்ளார். அவருக்கு மனநிலை பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று காலை உயிரியல் பூங்காவுக்கு கான் சென்றார். அங்கு சிங்கங்கள் உலாவும் பகுதியில் மதியம் 12.30 மணியளவில் கான் சென்றார்.  சுற்றுச்சுவரை தாண்டி சிங்கம் சுற்றித்திரியும் பகுதியில் குதித்தார். இதை பூங்காவில் கூடியிருந்த பொது மக்கள் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். பூங்கா காவலர்களுக்கும், நிர்வாகத்தினருக்கும் உடனே தகவல் தெரிவித்தனர். மேலும் கானை  நோக்கி பலரும், குரல் கொடுத்தனர். ஆனால், மக்களின் கூச்சலை கான் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. அவர் சிங்கத்தை நோக்கி வீறுநடை போட்டுள்ளார்.

அப்போது அங்கு இருந்த பெண் சிங்கம் கானை கண்டுக்கொள்ளவில்லை. சிங்கத்தை நெருங்கிய கான், அதன் முன் நேருக்கு நேர் அமர்ந்தார். போதையில் அதனை சீண்டியும் உள்ளார். அப்போதும் சிங்கம் அமைதியாக இருந்தது. இதனிடையே,  தகவல் கிடைத்து நிர்வாகத்தினர் அச்சத்துடன் பீட் நம்பர் 17 (சிங்க வளாகம்) வந்தனர். அங்கு சிங்கத்தின் முன் கான் அமர்ந்து இருப்பதைப்பார்த்து பீதி அடைந்தனர். அப்போது கான் அதனுடன் ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார். கொஞ்ச நேரம்  பொறுத்திருந்த சிங்கம், பின்னர் அவரை நோக்கி கோப முகத்துடன் செல்லத் தொடங்கியது. இதனால் பின்னோக்கி அந்த இளைஞர் சென்றார். மேலும், கூச்சல் போட்ட பொதுமக்களை அமைதியாக இருக்க அறிவுறுத்தினார். அதற்குள் கானை  எப்படி மீட்பது என ஆலோசித்த பூங்கா ஊழியர்கள், சிங்கத்திற்கு துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தி பின்னர் கானை பத்திரமாக மீட்டனர். அவரை டெல்லி போலீசிடம் ஒப்படைத்தனர். இப்போது இதுதொடர்பான வீடியோ வைரலாக  இணையதளத்தில் பரவி வருகிறது.

Related Stories: