நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்கு உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்: வசூல்ராஜா எம்பிபிஎஸ் போல ஏமாற்றியதாக தந்தைக்கு கண்டனம்

* ஒரே நாளில் சென்னை மற்றும் மும்பையில்  நடந்த நீட் தேர்வில் இரண்டு உதித்சூர்யாக்கள் பங்கேற்றுள்ளனர். சென்னையில் தேர்வெழுதியவர் 135 மதிப்பெண், மும்பையில் தேர்வெழுதியவர் 385  மதிப்பெண் பெற்றுள்ளனர்’’.

மதுரை: நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட மோசடி வழக்கில் கைதான மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய ஐகோர்ட் கிளை, அவரது தந்தையின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில்  வருவது போல, மகனை தவறாக வழி நடத்தியதாக கண்டனம் தெரிவித்தது. சென்னையைச் சேர்ந்த டாக்டர் வெங்கடேசன் மகன் உதித்சூர்யா, நீட் தேர்வில் ஆள்மாற்றாட்டம் செய்து தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது தொடர்பாக புகார்  கூறப்பட்டது. அப்போது அவர் முன்ஜாமீன் கேட்டு  ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனு நிலுவையில் இருந்தபோது ஆந்திர மாநிலம், திருப்பதியில் உதித்சூர்யா மற்றும் இவரது தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரை  போலீசார் கைது செய்தனர். இதனால் முன்ஜாமீன் மனு, ஜாமீன் மனுவாக மாற்றப்பட்டது. இதேபோல் தேனி நீதிமன்றத்தில் இருந்து டாக்டர் வெங்கடேசனின் ஜாமீன் மனு, ஐகோர்ட் கிளைக்கு மாற்றப்பட்டது.

இந்த மனுக்கள், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அரசு வக்கீல் ராபின்சன் ஆஜராகி, ‘‘ஒரே நாளில் சென்னை மற்றும் மும்பையில் நடந்த நீட் தேர்வில் இரண்டு உதித்சூர்யாக்கள் பங்கேற்றுள்ளனர்.  சென்னையில் தேர்வெழுதியவர் 135 மதிப்பெண், மும்பையில் தேர்வெழுதியவர் 385 மதிப்பெண் பெற்றுள்ளனர். மும்பை மதிப்பெண் அடிப்படையில் உதித்சூர்யா கல்லூரியில் சேர்ந்துள்ளார். சிபிசிஐடி விசாரணைக்கு டாக்டர் வெங்கடேசன்  ஒத்துழைக்கவில்லை. மும்பையில் தேர்வு எழுதியது யார் என்ற உண்மையை கூறினால் தான் விசாரணையை விரைந்து முடித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய முடியும். எனவே ஜாமீன் வழங்கினால் ஒட்டுமொத்த விசாரணையும்  பாதிக்கும்’’ என்றார்.

இதையடுத்து நீதிபதி, ‘‘தந்தையே மகனை தவறான பாதைக்கு அழைத்து சென்றுள்ளார். தனது ஆசையை மகன் மீது திணித்துள்ளார். இந்த வழக்கில் மாணவரின் தந்தைதான் முக்கிய குற்றவாளி. தந்தை கூறியதை மட்டும் தான் மகன்  செய்துள்ளார். இவரது செயல் ஒரு நல்ல டாக்டருக்கு அழகல்ல. வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் வரும் கதாபாத்திரம் போல டாக்டர் வெங்கடேசன் இருக்கிறார். அவரது விருப்பத்திற்காகத் தான் இந்த மோசடியே நடந்துள்ளது. தங்களது விசாரணைக்கு டாக்டர் வெங்கடேசன் ஒத்துழைக்கவில்லை என சிபிசிஐடி தரப்பில் கூறுகின்றனர். எனவே, அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. வயது மற்றும் எதிர்காலம் கருதி மாணவர் உதித்சூர்யாவுக்கு மட்டும் நிபந்தனை  ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி அலுவலகத்தில் தினசரி காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும்’’ என உத்தரவிட்டார்.

Related Stories: