உள்ளாட்சி தேர்தலுக்கான இடஒதுக்கீடு அரசாணையை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி

மதுரை: உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு அரசாணையை எதிர்த்த மனுக்கள் ஐகோர்ட் கிளையில் தள்ளுபடியாகின. சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்தைச் சேர்ந்த லட்சுமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,  இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட பஞ்சாயத்தில் எங்கள் கிராமத்தை பொதுப்பிரிவின் கீழ் மாற்ற வேண்டுமென கோரிக்கை வைத்தும் பலனில்லை. எனவே, உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கி மே 20ல்  வெளியிடப்பட்ட அரசாணைக்கு தடை விதித்து ரத்து செய்ய வேண்டும். முறையாக இட ஒதுக்கீடு செய்து புதிதாக அரசாணை வெளியிட வேண்டுமென உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார். இதேபோல் திருச்சி மாவட்டம், மணப்பாறை  தொப்பம்பட்டியைச் சேர்ந்த கருப்பணன் என்பவரும் ஒரு மனு செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர், ‘‘இது அரசின் கொள்கை முடிவு சம்பந்தமானது’’ எனக்கூறி இரு மனுக்களையும்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: