நகைக்கடை கொள்ளை வழக்கு விசாரணையில் திடுக் தகவல் சென்னை இன்ஸ்பெக்டருக்கு 30 லட்சம் லஞ்சம் கொடுத்த முருகன்: உடந்தையாக இருந்த 2 போலீசாரிடம் விசாரணை

திருச்சி: திருச்சி நகைக்கடை கொள்ளையர் தலைவன் முருகன், சென்னை இன்ஸ்பெக்டருக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். அவருக்கு உதவியாக இருந்த 2 போலீசாரிடம் திருச்சி தனிப்படை போலீசார் விசாரணை நடத்த உள்ளனர் என  புதிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. திருச்சி லலிதா ஜூவல்லரியில்  கடந்த 2ம் தேதி 29 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக  திருவாரூரை சேர்ந்த மணிகண்டன், கனகவல்லி, மதுரையை சேர்ந்த கணேசன்,  தஞ்சையை  சேர்ந்த ராதாகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். முக்கிய  குற்றவாளிகளான கும்பல் தலைவன் முருகன் பெங்களூரு, சுரேஷ் செங்கம்  நீதிமன்றங்களில் சரணடைந்தனர். முருகனை பெங்களூரு தனிப்படையினர்  போலீஸ் காவலில்  எடுத்து திருச்சிக்கு அழைத்து வந்து காவிரி ஆற்றங்கரையோரம் புதைத்து வைத்திருந்த  12 கிலோ நகைகளை பறிமுதல் செய்தனர்.

நகை கடை கொள்ளை வழக்கின் விசாரணை  அதிகாரியாக இன்ஸ்பெக்டர் கோசலராமன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே  மணிகண்டனிடம் பறிமுதல் செய்யப்பட்ட 4.8 கிலோ நகைகளை திருச்சி கோர்ட்டில்  ஒப்படைத்துள்ளார்.  அதேபோல் உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து  திருச்சி ஆற்றங்கரையில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை மீட்டு வர  இன்ஸ்பெக்டர் கோசலராமன் பெங்களூரு சென்றுள்ளார். அதோடு முருகனை போலீஸ் காவலில்   எடுப்பதற்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளார்.  இதனிடையே, போலீஸ் காவலில் உள்ள சுரேசிடம் திருச்சி  போலீசார் கடந்த 4 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவன்  தினமும் புதுப்புது தகவல்களை போலீசாரிடம்  தெரிவித்து வருகிறான்.

இதுபற்றி சுரேசிடம்  விசாரணை நடத்தும் போலீஸ் அதிகாரிகள் நேற்று கூறியதாவது:  கொள்ளை வழக்குகளில் பிடிபடாமல் இருக்க முருகன் போலீசாருடன் நெருக்கமாக இருந்து வந்தான். திருவாரூரில் எஸ்.பி.யாக இருந்த ஒருவருக்கு கார்   பரிசளித்த முருகன், இப்போது ஒரு இன்ஸ்பெக்டருக்கு ₹30லட்சம் கொடுத்துள்ளார். சென்னை அண்ணா நகரில் 2018 ஜூனில் நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தில் 2 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தியபோது,  முருகன் பெயரை தெரிவித்துள்ளனர். இந்த தகவல் முருகனுக்கு சென்றுள்ளது. இதற்காக, முருகன் மீது வழக்கு போடாமல் இருப்பதற்கு ரூ.30 லட்சம் கேட்டுள்ளார். இதற்கு 2 போலீசார் உடந்தையாக இருந்துள்ளனர்.

முதல் தவணையாக ரூ.10 லட்சத்தை 2 போலீஸ்காரர்கள் மூலம் இன்ஸ்பெக்டருக்கு முருகன் கொடுத்துள்ளான். இதையடுத்து, திருச்சி நகைக்கடையில் கொள்ளையடித்த நகையில் 4.50 கிலோ தங்கத்தைவிற்று ரூ.20 லட்சம் கொடுத்துள்ளார்.  இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர், சென்னையில் வேறு இடத்துக்கு மாறுதலாகி சென்றுவிட்டார். அவரிடம் விசாரிக்க திருச்சி தனிப்படை போலீசார் சென்னைக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். அவருக்கு  உதவிய 2 போலீஸ்காரர்களிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Related Stories: