வாக்காளருக்கு அதிமுக 20 கோடி விநியோகம் நாங்குநேரி தேர்தலுக்கு தடை கோரி வழக்கு: சுயேட்சை வேட்பாளர் ஐகோர்ட் கிளையில் தொடர்ந்தார்

மதுரை:  வாக்காளர்களுக்கு அதிமுக சார்பில் ரூ.20 கோடி பணம் விநியோகித்ததாக கூறி, நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கும்படி கோரி சுயேட்ைச வேட்பாளர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் அருகே சேரகுளத்தைச் சேர்ந்தவர் சங்கரசுப்ரமணியன். நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர். இவர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நாங்குநேரி தொகுதிக்கான  இடைத்தேர்தல் வரும் 21ம் தேதி நடக்கிறது. இதற்காக மாவட்டம் முழுவதும் சமூக விரோதிகள் பலர் லாட்ஜ்களில் தங்கியுள்ளனர். 7க்கும் அதிகமான அமைச்சர்களும் தனியார் வீடுகளில் தங்கி, அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பணிகளில்  ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக சமூகவிரோதிகள் மற்றும் குண்டர்கள் மூலம், ஒரு வாக்காளருக்கு ரூ.2 ஆயிரம் என இதுவரை ரூ.20 கோடி வரை பணம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் ரூ.28 லட்சம்  வரைதான் செலவிட முடியும். சமூகவிரோதிகள் தேர்தலின்போது வன்முறையில் ஈடுபடக்கூடும். இதை கண்காணிக்க தேர்தல் அதிகாரிகள் தவறிவிட்டனர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் கார் விபத்தில் சிக்கியதாக செய்திகள்  வெளியாகின. ஆனால், விபத்தில் சிக்கியவர்கள் குறித்து மருத்துவமனை குறிப்பேட்டில் இல்லை. இதேபோல், நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில் இருந்த 30 வாக்களிக்கும் இயந்திரங்கள், அக்.12ம் தேதி நள்ளிரவில் நெல்லை கலெக்டர்  அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. வாக்களிக்கும் இயந்திரங்களை திடீரென மாற்றியது இயற்கை நீதிக்கு மாறானது.

அமைச்சர்கள் அதிகளவு கூடியிருப்பதால், அரசு அதிகாரிகள் முறையாக பணியாற்றவில்லை. மாவட்ட நிர்வாகமே முறையாக செயல்படவில்லை. எனவே, நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதற்கான தேர்தல்  அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். மேலும் இடைத்தேர்தலை தள்ளி வைக்கவோ அல்லது நவ.21க்கு பிறகு நடத்தவோ தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு  வரவுள்ளது.

Related Stories: