எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி: புதிய பெட்ரோல் பங்க்குகள் திறப்பதற்கு தடை இல்லை

மதுரை: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை சேர்ந்த வெங்கிடுசாமி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில். தமிழக ஊரகப்பகுதிகளில் 5,125 பெட்ரோல் பங்க்குகள் துவங்குவதற்கான டெண்டர் அறிவிப்பு எரிபொருள்  நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளது. இது சுற்றுச்சூழல் மற்றும் பொதுநலனுக்கு எதிரானது.  இதனால் தற்போது பங்க்குகள் வைத்திருப்போர் பாதிப்பர். எனவே, புதிய பங்க்குகள் அமைப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்புக்கு தடைவிதிக்க  வேண்டும் என கூறியிருந்தார். இதேபோல், மேலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, எரிபொருள் நிறுவனங்கள் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘‘தற்போது வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்கேற்ப எரிபொருள் தேவைப்படுகிறது. அரசின் கொள்கைரீதியான முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது. விதிகளுக்கு உட்பட்டே பெட்ரோல் பங்க்குகள்  அமைக்கப்படவுள்ளன’’ என கூறப்பட்டிருந்தது. இதையடுத்து நேற்று தீர்ப்பளித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர், எரிபொருள் நிறுவனங்களின் பதில் மனுவை ஏற்று புதிய பெட்ரோல் பங்க்குகள் அமைக்க தடை விதிக்க  மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: