முதலீடு செய்ய இந்தியாவை விட சிறந்த இடம் உலகில் வேறில்லை : நிர்மலா சீதாராமன் பேச்சு

வாஷிங்டன்; ‘‘இந்தியாவை விட முதலீடு செய்ய சிறந்த இடம் உலகில் வேறு எதுவும் இல்லை,’’ என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் உள்ள சர்வதேச நிதியத்தில் நேற்று சர்வதேச முதலீட்டாளர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்ற கலந்துரையாடல் நடந்தது. இந்திய வர்த்தக கூட்டமைப்பு, அமெரிக்க கூட்டமைப்புடன்  இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று இந்தியா. இங்கு திறமையான மனித ஆற்றலும் அரசும் உள்ளது. மோடி தலைமையிலான அரசு இங்கு பல சீர்திருத்தங்களை சட்டம் மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படையில் தொடர்ந்து செய்து வருகிறது. முதலீடு செய்ய தகுந்த சூழல் நிலவும் நாடாக இந்தியா உள்ளது. இந்த நாட்டை விட முதலீடு செய்ய சிறந்த நாடு எதுவும் உலகில் இல்லை. மேலும், பொதுமக்களின் கையில் பணபுழக்கம் அதிகரிப்பதையும், நுகர்வை அதிகரிக்கவும் உறுதியேற்றுள்ளோம்.

Advertising
Advertising

இதற்காக வங்கிகள் வங்கிசாரா நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் கிராமங்களை நோக்கி செல்ல வேண்டும். கடந்த மக்களவை தேர்தலுக்கு முன் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், தேர்தலுக்கு பிறகு கடந்த ஜூலையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அடுத்த பட்ஜெட்டுக்காக காத்திருக்காமல் பாதிக்கப்பட்ட துறைகளில் தலையிட்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார். ‘இந்தியா தொடர்ந்து  பொருளாதார நிலை சரிவை சந்தித்து வருகிறதே?’ என கேட்கப்பட்டதற்கு, ‘`இந்தியாவில் பொருளாதார பற்றாக்குறையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,’’ என்று நிர்மலா பதிலளித்தார்.

Related Stories: