தவறான தகவலால் நடுவானில் திக்திக் இந்திய பயணிகள் விமானத்தை மறித்த பாக். போர் விமானங்கள்

புதுடெல்லி: தவறான தகவல் காரணமாக, ஆப்கன் தலைநகர் காபூல் சென்ற இந்திய பயணிகள் விமானத்தை பாகிஸ்தானின் எப்-16 போர் விமானங்கள் இடைமறித்த சம்பவம் கடந்த மாதம் நிகழ்ந்துள்ளது.  டெல்லியில் இருந்து ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு ஸ்பைஸ் ஜெட் பயணிகள் விமானம் 120 பயணிகளுடன் கடந்த மாதம் 23ம் தேதி சென்றது. அந்த விமானத்தின் குறியீட்டு எண் ‘எஸ்ஜி-21’. ஆனால், ‘ஐஏ’ என்ற குறியீடுடன் இந்தியாவில் இருந்து ஒரு விமானம் பாகிஸ்தான் வான் எல்லையில் பறப்பதாக பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு மையம் தகவல் தெரிவித்தது. இதனால், அது இந்திய விமானப்படை விமானமாக இருக்கலாம் எனக் கருதி, அதை இடைமறிக்க பாகிஸ்தான் விமானப் படையின் இரண்டு எப்-16 ரக போர் விமானங்கள் அனுப்பப்பட்டன.

அந்த இரு போர் விமானங்களும், ஸ்பைஸ் ஜெட் விமானத்தை சுற்றிவளைத்துள்ளன. மேலும், தாழ்வாக செல்லும்படி அதன் பைலட்களுக்கு போர் விமானத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை விமானத்தில் இருந்த பயணிகள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். உடனே, ஸ்பைஸ் ஜெட் விமான பைலட், எப்-16 போர் விமான பைலட்களை தொடர்பு கொண்டு, ‘இது எஸ்ஜி-21 ஸ்பைஸ் ஜெட். இந்திய பயணிகள் விமானம். வழக்கமான பயண திட்டப்படி காபூல் செல்கிறது,’ என தெரிவித்தார்.

இதையடுத்து, பாகிஸ்தான் விமான போக்குவரத்து கட்டுபாட்டு மையம் ‘ஐஏ’ என தவறாக தகவல் தெரிவித்த குழப்பம் நீங்கியது. ஸ்பைஸ் ஜெட் விமானம் ஆப்கானிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்ததும், பாகிஸ்தான் போர் விமானங்கள் திரும்பிச் சென்றுள்ளன. பாகிஸ்தான் போர் விமானங்கள் சுற்றி வளைத்ததும், ஜன்னல்களை மூடி அமைதி காக்கும்படி பயணிகளுக்கு விமானப் பணிப்பெண்கள் அறிவிப்பு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால், பயணிகள் சிறிது நேரம் பெரும் பதற்றத்தில் இருந்துள்ளனர்.

Related Stories: