தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும்: பேரறிவாளன் வழக்கில் நவ.5ல் விசாரணை உச்ச நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தனக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை  நிறுத்தி வைக்கக்கோரி, குற்றம் சாட்டப்பட்ட பேரறிவாளன் தாக்கல் செய்த மனுவை நவம்பர் 5ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள பேரறிவாளன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டுக்கு பேட்டரி நான் வாங்கி கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இதற்கான ஓர் ஆதாரத்தை கூட சிபிஐ தரப்பில் இதுவரை கொடுக்கப்படவில்லை. அதனால் இந்த வழக்கில் எனக்கு கொடுக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த மனு, நீண்ட நாட்களாக விசாரணைக்கு எடுக்காமல் நிலுவையில் போடப்பட்டு இருந்தது.

   இந்த நிலையில் பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் நேற்று ஒரு கோரிக்கை வைத்தார். அதில்,”ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன் தண்டனையை நிறுத்தி வைக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை காலம் கடத்தாமல் விசாரிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்ற நீதிபதி இந்த வழக்கை நவம்பர் 5ம் தேதி நீதிமன்றம் விசாரிக்கும் என்றும், அதேப்போல் கண்டிப்பாக பட்டியலில் இருந்து எக்காரணத்தை கொண்டும் வழக்கு நீக்கப்படாது என நேற்று உத்தரவிட்டார்.

Related Stories: