சசிகலாவை மீண்டும் சேர்க்கும் எண்ணம் இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்ட அறிவிப்பு

சென்னை: சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் எண்ணம் எதுவும் இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார், கூறினார்.சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று காலை 10 மணிக்கு அதிமுகவின் 48வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து, அதிமுக கட்சி கொடியை ஏற்றி வைத்து விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்புகள் வழங்கினர். பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சிறையில் இருந்து வெளியே வந்ததும் சசிகலா அதிமுகவில் இணைவாரா என கேட்கிறீர்கள்.

அவர் வெளியே வருவார், வரமாட்டார் என்பது சட்டப்பிரச்னை. அதிமுகவில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்று சிலர் நினைக்கிறார்கள், அது எடுபடாது. எங்களை பொறுத்தவரை, ஆடு பகை குட்டி உறவு என்பது கிடையாது. அதன்படி, தினகரன் குடும்பத்தில் உள்ள எல்லாருமே பகைதான் எங்களுக்கு. சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கப்படாது.ஏற்கனவே பொதுக்குழுவில் எடுத்த முடிவுப்படி சசிகலா, தினகரன் ஆகியோர் அதிமுகவில் சேர்க்கப்பட மாட்டார்கள். இது ஏற்கனவே எடுத்த முடிவு. அதில் எந்த மாற்றமும் இல்லை. தற்போது ஜெயலலிதா ஆட்சி சிறப்பாக நடக்கும்போது, சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் எதுவும் இல்லை’’ என்றார்.

Related Stories: