4வது போலீஸ் ஆணைய தலைவராக ஷீலாபிரியா நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழக முன்னாள் தகவல் ஆணையத்தின் தலைவராக இருந்த ஷீலா பிரியா, 4வது போலீஸ் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக ஆட்சியில் இருந்தேபோது, முதல்வராக இருந்த கலைஞர் 3 முறை போலீஸ் கமிஷனை நியமித்தார். அந்த கமிஷனின் பல்வேறு பரிந்துரைகளை அமல்படுத்தினார். அதிமுக ஆட்சியில் முதல் முறையாக போலீஸ் கமிஷன் அமைப்பதற்கான பட்டியல் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னாள் தகவல் ஆணையத் தலைவராக இருந்த ஷீலா பிரியாவை தலைவராக கொண்ட 4வது போலீஸ் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உள்துறை பிறப்பித்துள்ளது. இது தவிர இந்த ஆணையத்தில் வேடச்சந்தூர் எம்எல்ஏ பரமசிவம், முன்னாள் இணை செயலாளர் அறச்செல்வி ஆகியோர் உறுப்பினர்களாகவும், சைபர் கிரைம் போலீஸ்  கூடுதல் இயக்குநர் வெங்கட்ராமன் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேற்கண்ட ஆணையத்தில் நியமிக்கப்பட்டுள்ளவர்கள், போலீஸ் துறையில் பொதுவாக உள்ள பணிகளில் உள்ள பிரச்னைகள், போலீஸ் அலுவலர்கள் அதிகாரிகள் குடியிருப்பு மற்றும் நலன் சார்ந்த பிரச்னைகள், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் அதிரடிப்படையினர் பிரச்னைகள், போக்குவரத்து ஒழங்குபடுத்துவோர், குற்றங்களை கண்டுபிடிப்போர், குற்றத்தடுப்பு, போலீஸ் துறையை நவீனப்படுத்துதல், பொதுமக்கள், அரசியல்வாதிகள் போலீசாார் இடையே உள்ள தொடர்பு, உள்ளிட்ட அரசுத்துறைகளின் பிரச்னைகள், பணிகளை இந்த அலுவலர்கள் கவனிப்பார்கள்.

தமிழகத்தில் 1969ம்  ஆண்டு, 1989 மே மாதம், 2006 ஆகஸ்ட் மாதம், ஆகிய வருடங்களில் அமைக்கப்பட்ட ஆணையங்கள் அனைத்தும் திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஷீலா பிரியா ஆளுநர் மாளிகை செயலாளராக பணியாற்றியவர். பின்னர் 2011ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றதும் அரசுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து 2017ம் ஆண்டு முதல் 2019 மே மாதம் வரை மாநில தகவல் ஆணையத்தின் தலைவராக இருந்தார்.தற்ேபாது அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையம் ஒரு ஆண்டு காலத்துக்குள் மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் குறித்து ஆய்வு செய்து தனது பரிந்துரையை அரசுக்கு சமர்ப்பிக்கும் என்று உள்துறையின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட ஆணையங்கள் ஒரு குறிப்பிட்ட தேவைக்காகவே அமைக்கப்பட்டது என்று மயிலாப்பூர் சட்டப் பேரவை தொகுதி எம்எல்ஏவான நடராஜ் தெரிவித்துள்ளதுடன்,அந்த ஆணையங்களின் போலீஸ் துறை தொடர்பான பரிந்துரைகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஏற்கெனவே அமைக்கப்பட்ட ஆணையங்களை பொறுத்தவரையில் முதல் ஆணையத்தின் தலைவராக இருந்து கோபால்சாமி, நவீனப்படுத்துவது, மேம்பட்ட தகவல் தொடர்பை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்தினார். அதேபோல பெண் போலீஸ் கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர்கள் வரை பெண்களை நியமிக்கலாம் என்று கடந்த 1973ம் ஆண்டு கருத்து தெரிவித்தார். அதைத் தொடர்ந்து இரண்டாவதாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவராக சபாநாயகம் நியமிக்கப்பட்டார். அவர்தான் போலீஸ் துறையில் பணியாற்றும் போலீசாரில் தலைமைக் காவலர் பதவி, சப்இன்ஸ்பெக்டர்கள் பதவிகளை உருவாக்கி அதன் தரத்தை மேம்படுத்தினார். மூன்றாவதாக அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவராக பூர்ணலிங்கம் இருந்தார். பொருளாதார குற்றங்களை கண்டுபிடிக்கும் குழுக்களை பலப்படுத்தியதுடன், சிஐடி, புலனாய்வுகளை பலப்படுத்தினார். தற்ேபாது அமைக்கப்பட்டுள்ள இந்த ஆணையம், பொதுமக்களுக்கு போலீசார் நட்புறவுடன் தரமான முறையில் சேவையாற்ற வேண்டிய சூழலை உருவாக்க வேண்டும். கான்ஸ்டபிள் அளவில் ஆயிரக்கணக்கான நபர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். அதிக மக்கள் தொகை இருப்பதால் பயிற்சி கொடுக்க வேண்டியுள்ளது. நியமன எண்ணிக்ைக குறைவாக இருக்கிறது. அவர்களுக்கு ஆரம்ப கட்ட பயிற்சி ஒரு ஆண்டாவது இருக்க வேண்டும். அதில் எந்த பாரபட்சமும் காட்டக்கூடாது. அதேபோல தொழில் நுட்ப அறிவுள்ளவர்களாகவும் அவர்கள் இருந்தால் பொதுமக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்ய முடியும். இதைஎல்லாம் இந்த ஆணையம் செய்ய வேண்டும் என்று முன்னாள் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related Stories: