×

தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு

* 750லிருந்து 10,000 வரை கூடுதலாக கிடைக்கும் *12 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி 12 லட்சம் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 750 முதல் 10,000 வரை கூடுதல் சம்பளம் கிடைக்கும்.
டெல்லியில் கடந்த 9ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அகவிலைப்படி 12 சதவீதமாக இருந்தது. அதிலிருந்து 5 சதவீதம் உயர்த்தி 17 சதவீதமாக அறிவிக்கப்பட்டது. இந்த ஊதிய உயர்வு 2019 ஜூலை 1ம் தேதி முதல் கணக்கிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் அடிப்படையில், தமிழக அரசு ஊழியர்களுக்கும், அகவிலைப்படி உயர்வு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியை 5 சதவீதம் உயர்த்தி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கியதன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 1-7-2019 முதல் கணக்கிட்டு கூடுதல் ஊதியமாக 5 சதவீதம் வழங்கப்படும். அதன்படி, தற்போதுள்ள 12 சதவீத அகவிலைப்படி 17 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். ஜூலை முதல் செப்டம்பர் மாதத்திலான 3 மாத அகவிலைப்படி நிலுவை தொகையைதற்போது நடைமுறையில் உள்ள பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை (வங்கி) மூலம் வழங்கப்படும்.இந்த அகவிலைப்படி உயர்வு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் அல்லாத பிற அலுவலர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புக்களின் அலுவலர்களுக்கும், பல்கலைக்கழக மானியக்குழு / அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்விக்குழு சம்பள வீதங்களின் கீழ்வரும் அலுவலர்களுக்கும், அரசு மற்றும் உதவி பெறும் பல்தொழில் நுட்ப பயிற்சி பள்ளிகள், சிறப்பு பட்டய படிப்பு நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் / உடற்பயிற்சி இயக்குநர்கள் / நூலகர்கள், சிறப்பு ஊதிய அட்டவணையில் ஊதியம் பெறும் வருவாய் துறையில் உள்ள கிராம உதவியாளர்களுக்கும், சத்துணவு திட்ட அமைப்பாளர்கள், குழந்தைகள் நல அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணிபுரியும் ஊராட்சி செயலாளர்கள், எழுத்தர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கும் பொருந்தும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகி கூறும்போது, அரசு ஊழியர்கள் மற்றும் அரசு ஆசிரியர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வினால் அரசு துறையில் குறைந்தபட்சம் ஊதியம் பெறும் அலுவலக உதவியாளர்களுக்கு ரூ.750 வரை ஊதிய உயர்வு கிடைக்கும். ஐஏஎஸ் அந்தஸ்தில் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு அதிகப்பட்சமாக ரூ.10 ஆயிரம் வரையில் ஊதிய உயர்வு கிடைக்கும். இந்த அகவிலைப்படி உயர்வினால் சுமார் 12 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் பயன்பெறுவார்கள். ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கு தற்போது அகவிலைப்படி உயர்வு அறிவிக்கவில்லை. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றார்.


Tags : Government ,Tamil Nadu ,teachers , Government, Servants, Teachers, cost
× RELATED கனவு ஆசிரியர்களாக தேர்வு...