மஞ்சூரில் கனமழை: மண் சரிந்து போக்குவரத்து துண்டிப்பு

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் விடிய, விடிய பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தது. குந்தா பாலம் மற்றும் மெரிலேண்ட் பகுதிகளில் மண்சரிவும் ஏற்பட்டதால் மஞ்சூரில் இருந்து ஊட்டி மற்றும் குன்னூருக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுபுற பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மழையால் மஞ்சூர் பகுதியை சுற்றிலும் பல்வேறு இடங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுவது வாடிக்கையாக உள்ளது. இரு தினங்களுக்கு முன் குந்தா பாலம் பகுதியில் பெய்த கனமழையில் நிலச்சரிவு ஏற்பட்டு பெரிய, பெரிய பாறைகள், கற்கள் உருண்டு விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றிரவும் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதில் குந்தா பாலம் பகுதியில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. இதேபோல் மெரிலேண்ட் அருகே அத்திமரம் என்ற இடத்திலும் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மஞ்சூர் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளுக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறையினர் விரைந்து சென்று சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். மேலும் ஜேசிபி இயந்திரங்களும் வரவழைக்கப்பட்டு மண்சரிவுகள் அகற்றப்பட்டது. இந்த சம்பவத்தால் மஞ்சூர் - ஊட்டி சாலையில் இன்று காலை சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் நேற்றிரவு பெய்த மழையில் கிண்ணக்கொரை, கோர குந்தா, அப்பர்பவானி, அவலாஞ்சி பகுதிகளிலும் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்துள்ளது. மேலும் தொடர் மழையால் அவலாஞ்சி, குந்தா, கெத்தை அணைகளில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளதால் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

Related Stories: