கல்கி ஆசிரமத்தில் 2-வது நாளாக தொடர்கிறது வருமான வரித்துறை சோதனை: ரூ.9 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்கள் பறிமுதல்

சிற்றூர்: கல்கி ஆசிரமத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மட்டும் 1000 ஏக்கர் நிலம் வாங்கி குவித்துள்ள ஆதாரம் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாக கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் இயங்கி வருகிறது. இந்த ஆசிரமத்தை விஜயகுமார் என்பவர் நிறுவி ஆன்மிக பணிகளை செய்து வருகிறார். ஆந்திர மாநிலம் சிற்றூர் மாவட்டம் வரதயபாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனையை தொடங்கினர். அங்கு நடைபெற்ற முதல் நாள் சோதனையில் ரூ.34 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர்கள் இரண்டாவது நாளாக இன்றும் சோதனையை தொடர்கின்றனர். இந்த சோதனையில் இதுவரை ரூ.33 கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 24 கோடி ரூபாய் இந்திய ரூபாய் நோட்டுகள் என்றும்  9 கோடி மதிப்புள்ள அமெரிக்க டாலர்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர கென்யா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் கல்கி ஆசிரமம் சார்பில் ஏராளமான பணம் முதலீடு செய்யப்பட்டது. கல்கி ஆசிரமத்துக்கு இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் கிளைகள் உள்ளன. சென்னையில் 20 கிளைகள் இருக்கின்றன.

தமிழகத்தில் மட்டும் 1000 ஏக்கர் நிலம் வாங்கியது தொடர்பான ஆதாரங்களும் சோதனையில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பக்தர்களிடம் இருந்து பணம் வசூல் செய்து அதனை முறைகேடாக வெளிநாடுகளுக்கு கொண்டு சென்று முதலீடு செய்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் கிருஷ்ணா, அவரது மனைவி மற்றும் ஆசிரம தலைமை செயல் அலுவலர் லோகேஷ் ஆகியோரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: