நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை நவம்பர் 11ம் தேதி வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவு

லண்டன்: நீரவ் மோடியின் நீதிமன்ற காவலை நவம்பர் 11ம் தேதி  வரை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் சுமார் ரூ.13,000 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட குஜராத்தை சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார். இது, இந்திய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. நீரவ் மோடி மீதான மோசடி தொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் நீரவ் மோடி சுதந்திரமாக சுற்றி திரிவது தெரிய வந்தது.

இதையடுத்து, இந்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கடந்த மார்ச் 19ம் தேதி அவரை லண்டன் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமின் கோரி அவர் பலமுறை தாக்கல் செய்த மனுக்களை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிராகரித்து விட்டது. அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி  நிரவ் மோடி வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக வெஸ்ட் மின்ஸ்டர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நிரவ் மோடியின் காவலை அக்டோபர் 17ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுருந்தது.

இந்தநிலையில் இன்றுடன் காவல் முடிவடைந்த நிலையில், மீண்டும் நீதிமன்றத்தில் அவர் வீடியோ கான்ப்ரன்ஸ் மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவலை நவம்பர் மாதம் 11ம் தேதி வரை நீடித்துள்ளது. மேலும், நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு அடுத்த ஆண்டு மே மாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, அடுத்தாண்டு மே மாதம் 11ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளது. மேலும் இதற்காக அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் முதலே நீரவ் மோடியிடம் வீடியோ காணபிரென்ஸ் மூலம் விசாரணை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: