நாட்டிலேயே முதல் முறையாக மகப்பேறு நலன் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கும் ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பு: கேரள அரசு அறிவிப்பு

திருவனந்தபுரம்: நாட்டிலேயே முதல் முறையாக மகப்பேறு நலன் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகள், பெண் ஊழியர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கும் திட்டத்தை கேரள அரசு கொண்டு வர உள்ளது. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கும் மகப்பேறு நலன்கள், பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற கேரள அரசு கொண்டு வந்த இந்த அறிவிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என கேரள அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கேரள அரசு வெளியிட்ட அறிவிப்பில்,  கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி மாநில அமைச்சரவை கூடி எடுத்த முடிவான தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், ஆசிரியைகளுக்கும் மகப்பேறு நலன் சட்டத்தின் கீழ் பலன் கிடைக்க வேண்டும் என்று அனுமதி கோரி அனுப்பப்பட்ட அறிவிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த உத்தரவு மூலம் மாநிலத்தில் தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான ஊழியர்கள், ஆசிரியைகள் 26 வாரங்கள் மகப்பேறு விடுப்பை ஊதியத்துடன் எடுக்க முடியும். மேலும் மகப்பேறு காலத்தில் குழந்தை பிறக்கும் வரை மாதம் ரூ.1,000 மருத்துவச் செலவுக்காக வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. மகப்பேறு நலச்சட்டத்தின்கீழ் நாட்டிலேயே முதல் முறையாக தனியார் பள்ளிகளில் பணிபுரியும் பெண் ஊழியர்கள், ஆசிரியைகளுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கப்பட உள்ளது.

ஏற்கெனவே தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு குறைந்தபட்சம் ஊதியம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஊழியர்கள், ஆசிரியர்களும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: