நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டில் ஹிந்து-முஸ்லிம் என பார்க்கிறீர்களா?: காங்கிரஸ் மீது பிரதமர் மோடி சாடல்

பார்லி: மக்கள் பணத்தை கொள்ளைடித்தவர்களை சிறையில் அடைக்கும் பணி துவங்கி விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மகாராஷ்ரா மாநிலத்தில் வரும் அக்டோபர் 21-ம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு  நடைபெறவுள்ளது. மகாராஷ்ரா மாநிலத்தை பொறுத்தவரை தனிமெஜாரிட்டியுடன் ஆளும் கட்சி பாஜக உள்ளது. இந்த முறை பாஜக-சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. மறுபக்கம், தேசியவாத  காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள காங்கிரஸ் கட்சி, ஆட்சியைப் பிடிக்க விரும்புகிறது. இவர்கள் இருவருக்கும் இடையிலான நேரடிப் போட்டி நிகழ்கிறது. இதனால், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு  வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்ரா மாநிலம் பார்லி என்ற இடத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் மோடி, காஷ்மீருக்கு சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் குறித்து வரலாற்றில் விவாதிக்கப்படும் போது, நாட்டு  நலனுக்காக எடுக்கப்பட்ட அந்த முடிவு குறித்தும், அப்போது, அதனை எதிர்த்தவர்கள், விமர்சித்தவர்கள், அவர்களின் கருத்துகள் குறித்தும் நினைவில் கொள்ளப்படும் என்றார்.

காங்கிரஸ் தலைவர் ஒருவர், காஷ்மீரில் ஹிந்துக்கள் அதிகம் இருந்தால், சிறப்பு சட்டம் நீக்கம் என்ற முடிவை பாஜக எடுத்திருக்காது என கூறினார். நீங்கள், நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டில் ஹிந்து முஸ்லிம் என பார்க்கிறீர்களா? காஷ்மீர்  குறித்த மத்திய அரசின் முடிவால், நாடு அழிந்துவிடும் என காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறினார். முடிவு எடுத்து 3 மாதங்கள் ஆகிவிட்டது. நாடு அழிந்துவிட்டதா? என்று பிரதமர் மோடி உரையாற்றினார்.

மற்றொரு தலைவர், சிறப்பு சட்டம் நீக்கத்தால், காஷ்மீர் நம்மை விட்டு சென்றுவிடும் என தெரிவித்தார்? காஷ்மீர் நம்மை விட்டு சென்றுவிட்டதா? யாராவது காஷ்மீர் செல்ல வேண்டும் என விரும்பினால் என்னிடம் தெரிவியுங்கள். நான்  அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன். மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் சிறையில் அடைக்கப்படும் பணிகள் துவங்கிவிட்டது. மகாராஷ்ரா சட்டசபை தேர்தலில், பாஜக அனைத்து வெற்றி சாதனைகளையும் முறியடிக்கும் என்றும்  பிரதமர் மோடி தெரிவித்தார்.

Related Stories: