×

தமிழகத்தில் தொடங்கியது வட கிழக்கு பருவமழை: சென்னையில் அதிகாலை முதல் கனமழை...பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

சென்னை: தென்மேற்கு பருவ மழை முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, ஒருநாள் முன்னதாகவே வட கிழக்கு பருவமழை தமிழகத்தில் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் வழக்கமாக அக்டோபர் 20ம் தேதி வட கிழக்கு பருவ மழை தொடங்கும்.   ஆனால், இந்த ஆண்டு ஒருநாள் முன்னதாகவே தொடங்கிவிட்டது. கேரளாவில் இதுவரை பெய்து வந்த தென் மேற்கு பருவமழை நேற்றுடன் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில்  உருவான  காற்று சுழற்சியால் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வந்தது. அதிகபட்சமாக நேற்று பூந்தமல்லியில் 110 மிமீ மழை பெய்துள்ளது. பாம்பன் 100 மிமீ, சோழவரம் 90 மிமீ, பூண்டி 70 மிமீ, தாமரைப்பாக்கம் 60 மிமீ,  புதுக்கோட்டை 50  மிமீ, சங்கரன்கோயில், விருதுநகர், மணப்பாறை, திருவாலங்காடு, காரைக்குடி, ராமநாதபுரம், மணல்மேல்குடி, சாத்தூர், அருப்புக்கோட்டை, மேட்டூர் 40 மிமீ மழை பெய்துள்ளது.

இந்நிலையில், வங்கக் கடல் பகுதியில் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. அத்துடன் கிழக்கு திசையில் இருந்து ஈரப்பதம் உள்ள காற்று வீசுவதால் தமிழகத்தில் தெற்கு மாவட்டங்கள் மற்றும்   டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும். மேலும் வெப்ப சலனம் காரணமாக வளி மண்டல மேல் அடுக்கில் 15 கிமீ உயரம் முதல் 1.2 கிமீ உயரம் வரை காற்று சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதனால் தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தில்   திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.  இதன் காரணமாக முக்கிய   துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு 1, 2 எண் ஏற்றப்பட்டுள்ளன. கடலில் மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். காற்றழுத்த தாழ்வு நிலை  காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதையடுத்து, திருவல்லிக்கேணி, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், கோடம்பாக்கம்,  கிண்டி, போரூர், வேளச்சேரி, தரமணி, திருவான்மியூர், தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை கொட்டுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்கை  பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தண்ணீர் பஞ்சம் உள்ள நிலையில் பொதுமக்கள் மழை பெய்வதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விடுமுறை இல்லை:

சென்னையில் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக வசந்தி பரவிய நிலையில், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை; வழக்கம்போல்  செயல்படும் என மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார். 


Tags : North East Monsoon ,Chennai ,holidays ,schools , North East Monsoon: Heavy rains in early morning in Chennai ... No holidays for schools
× RELATED கடந்த 7 ஆண்டுகளாக கூடுதல் மழை பெய்தும் கண்மாய்களில் தண்ணீர் இல்லை