×

வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவோரை அச்சுறுத்தக்கூடாது வாக்குரிமை என்னும் வலிமையான ஆயுதத்தை வீணடிக்க வேண்டாம்

* தேர்தல் புறக்கணிப்பு வழக்கில் ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை : ஜனநாயக நாட்டில் மிகப்பெரியது வாக்குரிமை என்றும், தேர்தல் புறக்கணிப்பு தவறானது என்றும் ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழர் விடுதலை களம் அமைப்பின் தலைவர் வக்கீல் ராஜ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தேவேந்திரகுல வேளாளர் சமூகத்திலுள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றாக இணைத்து, தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்க வேண்டுமென்பது நீண்ட நாள் கோரிக்கை. இதை நிறைவேற்ற தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  எனவே, இதை வலியுறுத்தி நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட 113 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர் இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.ஆனால் போலீசார் பொய் வழக்குகள் பதிந்து,  விசாரணை என்ற பெயரில் எங்கள் சமூகத்தினரை துன்புறுத்தி வருகின்றனர். எனவே, பொய்வழக்கு பதியக்கூடாது. விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தக்கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘கோரிக்கை மீது கவனத்தை ஈர்க்க வேண்டி தங்களது வீடுகளில் கருப்புக்கொடி ஏற்ற ஜனநாயகத்தில் உரிமை உண்டு. எனவே, வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவோரை போலீசார் அச்சுறுத்தக்கூடாது. ஓட்டுரிமை என்பது ஜனநாயகம் வழங்கியுள்ள மிகப்பெரிய உரிமை. இது வலுவானது. தேர்தல் புறக்கணிப்பு என்ற பெயரில் இதை ஒருபோதும் வீணடிக்கக்கூடாது. புறக்கணிப்பு என்பது தவறானதும் கூட. தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க தேர்தல் நடைமுறையிலேயே வழியுண்டு. புறக்கணிப்பு என்பது தவறான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும். புறக்கணிப்பதால் எந்த பலனும் இல்லை. ஏனெனில் வாக்குரிமை எனும் வலிமையான ஆயுதத்தை வீணடிக்கக்கூடாது. வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவது அவர்களது உரிமை. பொது இடங்களில் கட்டப்பட்டுள்ள கருப்புக்கொடியை போலீசார் அகற்றலாம்’’ எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.

Tags : Do not waste ,powerful weapon,suffrage
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...