லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் திருடிய கொள்ளையன் முருகனுக்கு 8 நாள் போலீஸ் காவல்

பெங்களூரு :  திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் பெங்களூரு  போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள முருகனின் போலீஸ் காவல் முடிந்துள்ளதை  தொடர்ந்து மேலும் 8 நாட்கள் பொம்மனஹள்ளி போலீசார் காவலில் எடுத்துள்ளனர். திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி  நகைக்கடையின் மேற்கு புறம் உள்ள சுவரை துளையிட்ட மர்ம நபர்கள் ரூ.13 கோடி  மதிப்பிலான 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைரம், பிளாட்டினம் உள்ளிட்ட  ஆபணரங்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய  குற்றவாளியான முருகனை போலீசார் அடையாளம் கண்டு அவரை பிடிக்க பலவழிகளில்  முயற்சி மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், பெங்களூரு கொள்ளை வழக்கு ஒன்றில்  கடந்த 2015 அக்டோபர் 21ம் தேதி பானஸ்வாடி போலீசார் முருகன் உள்பட மூன்று  பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல போலீஸ்  நிலையங்களில் அவர்கள் மீது திருட்டு, கொள்ளை வழக்குகள் என 119 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் கடந்த  11ம் தேதி பெங்களூரு 11வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி  நாகம்மா முன்னிலையில் முருகன் சரணடைந்தார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற  காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையில் பொம்மனஹள்ளி போலீசார், பல  கொள்ளை வழக்குகளில் முருகனிடம் விசாரணை நடத்த பெங்களூரு சிட்டி சிவில்  மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தின் மூலம் 7 நாட்கள் காவலில் எடுத்தனர். பெங்களூருவில் விசாரணை நடத்திய பின், திருச்சி லலிதா ஜுவல்லரியில் திருடிய  ஆபரணங்கள் தொடர்பாக சில தகவல்கள் கொடுத்தார். அதை தொடர்ந்து பெரும்பலூர், திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று நதியோரத்தில்  புதைத்து வைத்திருந்த 11.317 கிலோ தங்க ஆபரணங்கள், 541.61 கிராம்  பிளாட்டினம், 37.39 கிராம் வைர ஆபரணங்களை மீட்டனர்.

முருகனின்  போலீஸ் காவல் நேற்றுடன் முடிந்ததை தொடர்ந்து பெங்களூரு நிருபதுங்கா  சாலையில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் பொம்மனஹள்ளி போலீசார்  ஆஜர்படுத்தினர். காவல் கோரி போலீசார் தாக்கல் செய்த மனுவை பரிசீலனை  செய்த நீதிபதி 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி  வழங்கினார். அதை தொடர்ந்து பொம்மனஹள்ளி போலீசார் அழைத்து சென்றனர்.

Related Stories: