தமிழகம் முழுவதும் 40 ஆயிரம் ஏரிகள் படிப்படியாக தூர்வாரப்படுகின்றன : எடப்பாடி பழனிசாமி தகவல்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காணையில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் ஜெயலலிதா ஆட்சியில்தான் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தினோம். கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயனடைந்து வருகிறார்கள். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் இந்த மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் எங்கெங்கு குடிநீர் பிரச்னை இருக்கிறதோ அது சரி செய்யப்படும்.

நந்தன்கால்வாய் திட்டம் முழுமைபடுத்த சட்டமன்றத்தில் 110 விதியின்கீழ் ரூ.40 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்து செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம் பனமலை உள்ளிட்ட 11 ஏரிகள் தண்ணீர் நிரம்பும். மேலும் சாத்தனூர் அணை உபரிநீரும் இந்த வாய்க்காலில் கொண்டு வரும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது. நீரை வீணாக்காமல் சேமிக்க குடிமராமத்து திட்டத்தின்கீழ் தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறையின்கீழ் உள்ள 14 ஆயிரம் ஏரிகள், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் உள்ள 26 ஆயிரம் ஏரிகள் என மொத்தம் 40 ஆயிரம் ஏரிகள் படிப்படியாக தூர்வாரப்பட்டு வருகின்றன. ஊரகவளர்ச்சித்துறை ஏரி, குளங்களை தூர்வார ரூ.1,250 கோடி நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆறுகளில் தடுப்பணைகள் கட்டப்படுவதன் மூலம் கடலில் வீணாக தண்ணீர் கலக்காமல் சேமிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: