சாலையில் பேனர் வைக்கும் விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

புதுடெல்லி : சாலையில் பேனர் வைக்கும் விவகாரத்தில் கொடுக்கப்பட்டுள்ள தடை, அரசுக்கு பொருந்தாது என்ற உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த மாதம் அ.தி.மு.க. நிர்வாகி ஜெயகோபால் மகன் திருமணத்துக்காக வைக்கப்பட்ட ஒரு பேனர் காற்றில் பறந்து வந்து விழுந்து, சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற 23 வயது இளம்பெண் உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பேனர் வைப்பதற்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் கடந்த 11 மற்றும் 12ம் தேதி நடைபெற்றது.  இதில் இவர்களது வருகையின் போது வரவேற்பு பேனர் வைக்க அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

குறிப்பாக சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை மொத்தம் 14 இடங்களில் பேனர் வைக்க அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து மனுவை விசாரித்த நீதிமன்றம் பேனர் வைப்பதற்கு அரசுக்கு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது. இதற்கு எதிர்க்கட்சிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக டிராபிக் ராமசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு ஒன்றை நேற்று தாக்கல் செய்துள்ளார். அதில், “சாலைகளில் வைக்கப்படும் பேனர்கள் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பி விபத்துக்களை தொடர்ந்து ஏற்படுத்தியதால் தான் அதற்கு தடை விதித்து ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் இந்த தடை என்பது அரசுக்கு பொருந்தாது என குறிப்பிடப்பட்டது. இதுபோன்ற உத்தரவு என்பது தவறான முன் உதாரனம் என்பதால் அதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட மனு, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: