×

கோவை பள்ளி குழந்தைகள் இருவர் கொலையில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை எப்போது? : உச்சநீதிமன்றம் தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி: கோவையை சேர்ந்த பள்ளி குழந்தைகள் முஸ்கான்- ரித்திக் ஆகியோர் கொலை வழக்கில் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதை எதிர்த்து குற்றவாளி தாக்கல் செய்த சீராய்வு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நேற்று ஒத்திவைத்தது. கோவையில் கடந்த 2010ம் ஆண்டு பள்ளிக்கு புறப்பட்ட அக்கா, தங்கையான முஸ்கான், ரித்திக் ஆகியோரை வேன் டிரைவர் மோகன்ராஜ் என்கிற மோகனகிருஷ்ணன், அவரது நண்பர் மனோகரனின் உதவியுடன் பொள்ளாச்சி மலைப்பகுதிக்கு காரில் கடத்தி சென்றார். அங்குள்ள பி.ஏ.பி வாய்க்காலில் தள்ளி இருவரையும் கொலை செய்தனர். இதுதொடர்பாக கோவை வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப் பதிந்து மோகன்ராஜ், மனோகரன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமி முஸ்கானை பலாத்காரம் செய்து கொன்றது தெரியவந்தது. இதையடுத்து விசாரணைக்காக அழைத்து சென்றபோது தப்பி ஓடிய வேன் டிரைவர் மோகன்ராஜை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மனோகரனுக்கு கோவை மகளிர் நீதிமன்றம் இரட்டை தூக்கு, 3ஆயுள் ஆகிய தண்டனைகளை வழங்கி தீர்ப்பளித்தது. இதையடுத்து இதே உத்தரவையே சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு தடைகோரி மனோகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனோகரனுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து மனோகரனுக்கு ஆகஸ்ட் 20ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இந்த நிலையில் தமக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை செப்டம்பர் 20ம் தேதி நிறைவேற்ற தடை விதிக்க கோரி குற்றவாளி மனோகரன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்ததோடு வழக்கு விசாரணையை அக்டோபர் 16க்கு ஒத்திவைத்து கடந்த மாதம் 17ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

அந்த சீராய்வு மனு உச்ச நீதிமன்ற நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் சித்தார்த் லூத்ரா, “இந்த வழக்கை பொருத்தமட்டில் ஆரம்பம் முதலே சரியான விசாரணை நடத்தப்படவில்லை. குறிப்பாக மாநில சட்ட உதவி மையத்தின் சார்பாகக் கூட ஒரு வழக்கறிஞரும் ஆஜராகவில்லை. மேலும் வழக்கு தொடர்பான வாக்குமூலத்தை மனோகரனை துன்புறுத்தி தான் போலீசார் வாங்கியுள்ளனர் என வாதிட்டார். இதையடுத்து வழக்கின் வாதங்கள் அனைத்தும் முடிந்து விட்டதாக தெரிவித்த நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். மேலும் தமிழக அரசு தனது விரிவான பதில் அறிக்கையை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags : school children ,murder ,Coimbatore ,Supreme Court , Conviction for the murder , two Coimbatore school children convicted?
× RELATED கனடாவில் பள்ளி குழந்தைகளுக்கு உணவுத் திட்டம் அறிமுகம்