நெசவாளர்களுக்கு ஆண்டுக்கு 24,000 : ஆந்திர முதல்வர் ஜெகன் முடிவு

திருமலை: ஆந்திராவின் வெலகம்புடியில் உள்ள தற்காலிக தலைமை செயலகத்தில் மாநில அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஜெகன்மோகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தித்துறை அமைச்சர் பேர்னி நானி நிருபர்களிடம் கூறியதாவது: கைத்தறி நெசவாளர்கள் குடும்பத்தினருக்கு ஒய்எஸ்ஆர் நேசன்னா நேஸ்தம் (நெசவாளியின் நட்பு) என்ற திட்டத்தில் 24 ஆயிரம் நிதி உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 21ம் தேதி நெசவாளர்கள் தினமாக கருதி இந்த தொகை வழங்கப்படும். மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தில் வழங்கக்கூடிய நிதி உதவி 10 ஆயிரமாக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஊர்க்காவல் படையினருக்கு தினந்தோறும் 600 வழங்கக்கூடிய தினக்கூலி 710 ஆக உயர்த்தப்படுகிறது. மதிய உணவு திட்டத்தின் கீழ் பணி புரியக்கூடிய ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரமாக சம்பளம் உயர்த்தப்படுகிறது. ஆந்திராவில் உள்ள  பார் அசோசியேஷனில் உறுப்பினராக  மூன்றாண்டுகளுக்கு மேல் உள்ள  இளநிலை வழக்கறிஞர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டம் டிசம்பர் 3ம் தேதி தேசிய வழக்கறிஞர்கள் தினத்தன்று நடைமுறைக்கு வரும். விவசாயிகளுக்கு இலவசமாக போர்வெல் அமைப்பதற்காக 200 போர்வெல் இயந்திரங்கள் வாங்கப்படும். 3500 பழைய பஸ்களை நீக்கி புதிய பேருந்துகள் வாங்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது என்றார்.

Related Stories: