×

30 லட்சம் கொள்ளை வழக்கில் திடீர் திருப்பம் ‘‘பணத்துக்கு பதில் வெற்று காகிதம்’’ நாடகத்தை அரங்கேற்றிய கும்பல்

கோவை: கோவை கணியூர் டோல்கேட் அருகே ரூ.30 லட்சம்  கொள்ளை  வழக்கில் திடீர்  திருப்பம் ஏற்பட்டுள்ளது. பணத்துக்கு பதில் வெற்று காகிதத்தை  கொடுத்து நாடகத்தை  அரங்கேற்றிய  கும்பலை சேர்ந்த 12 பேரை  போலீசார் கைது செய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் லோகமான்யா திலக் வீதியை சேர்ந்தவர் தர்ஷன் அசோக் (23). விளம்பர குறும்படம் எடுத்து வருகிறார். கோவை கே.பி.ஆர். நகரை சேர்ந்தவர் ராகுல்குமார் (23). டிசைனிங்  தொழில்  செய்து வருகிறார். இவர்கள்  2 பேரும் இணைந்து சாயிபாபா  காலனியில் விளம்பர தொழில் நிறுவனம் நடத்தி வருகின்றனர். இருவரும் கடந்த 14ம் தேதி இரவு கணியூர்  டோல்கேட் அருகே பைக்கில்  சென்று கொண்டிருந்தனர்.  அப்போது பைக்கில் வந்த கும்பல் இவர்களை வழிமறித்து ராகுல்குமாரிடம் இருந்த  பேக்கை பறித்து சென்றனர். அதில் ரூ.30 லட்சம்  ரூபாய் இருந்ததாக  கூறப்பட்டது. இதுதொடர்பாக கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு  செய்து விசாரணை  மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் முடிவில் வெற்று காகிதத்தை வைத்து ரூ.30 லட்சம் கொள்ளை நாடகத்தை அரங்கேற்றிய பிரபாகரன் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த கொள்ளை நாடகம் பற்றிய விவரம்  வருமாறு:-
நண்பர்களான தர்ஷன்,  ராகுல்குமார் ஆகிய  இருவரும் தொழிலை  மேம்படுத்த ரூ.50 லட்சம் கடன் வாங்க திட்டமிட்டனர்.

அதற்கு 2  பேரும் திருப்பூர் இளையான்குடியை சேர்ந்த பிரபாகரன் என்பவரை அணுகியுள்ளனர். அப்போது பிரபாகரன் தன்னை சினிமா பட பைனான்சியர் என தெரிவித்துள்ளார். ரூ.50 லட்சம் கடன் வழங்க ஏதாவது அசையா சொத்து பத்திரம் வேண்டும்  என கூறியுள்ளார். இதனையடுத்து ராகுல்குமார் தனது சொத்து பத்திரத்தை பிரபாகரனிடம் கொடுத்துள்ளார். பின்னர்,  இருவரையும் திருப்பூருக்கு நேரில் வந்து பணத்தை பெற்று கொள்ளுமாறு  தெரிவித்துள்ளார். அதன்படி, கடந்த 14ம் தேதி மாலை இருவரும் பைக்கில் திருப்பூர் சென்றனர். அவர்களிடம் முதற்கட்டமாக ரூ.30 லட்சம் தருகிறேன் என  ஒரு பேக்கை பூட்டி கொடுத்து, வழியில் போலீசார் பார்த்தால் பிடித்து கொள்வார்கள். எனவே உங்கள் அலுவலகத்துக்கு  எடுத்து செல்லுங்கள்.  எங்கள்  ஊழியர் பேக்கின்  சாவியை அங்கு கொண்டு வந்த பின்னர்  திறந்து பாருங்கள்  என கூறினார். இதன்பின் இருவரும் பைக்கில் கோவை புறப்பட்டுள்ளனர். தர்ஷன்  பைக்கை ஓட்ட ராகுல்குமார்  பேக்குடன் பின்னால் அமர்ந்திருந்தார். இதையடுத்து, அன்று இரவு கணியூர் டோல்கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் பைக்கில் வந்த 8 பேர் கும்பல் வழிமறித்து ராகுல்குமாரிடமிருந்த பேக்கை பறித்து கொண்டு தப்பி சென்றது.

போலீசாரின் விசாரணையில், பிரபாகரன் கொடுத்து அனுப்பிய  பேக்கை அவர் அனுப்பிய கும்பலே பறித்து  சென்றது தெரியவந்தது. மேலும் அவர் பணத்துக்கு பதிலாக வெற்று காகித  தாளை வைத்திருந்ததும் தெரிந்தது. தான்  கொடுத்தனுப்பியது வெற்று காகித  தாள்  என  இருவருக்கும் தெரியக்கூடாது என்பதற்காக  கொள்ளை நாடகத்தை  அரங்கேற்றியதும்  கண்டுபிடிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து கொள்ளை நாடகத்தை  அரங்கேற்றிய பைனான்ஸ் அதிபர்  பிரபாகரன், கூலிப்படையை சேர்ந்த தமிழரசன் உள்பட 12 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.


Tags : gang , Thirty lakhs, robbery case
× RELATED கும்மிடிப்பூண்டி அருகே காங்....