×

பயிற்சி இயந்திரங்கள் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படாது நாங்குநேரி தொகுதியில் 30 இயந்திரங்கள் மாற்றமா? தேர்தல் அலுவலர் பதில்

நெல்லை: நாங்குநேரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன் கூறியிருப்பதாவது:  இடைத்தேர்தலுக்காக 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 688 மின்னணு வாக்குப்பதிவு  இயந்திரங்கள், 359 கட்டுப்பாட்டு கருவிகள்,  404 விவிபேட் இயந்திரங்கள் பெங்களூரு பெல் நிறுவன பொறியாளர்களை கொண்டு முதல் நிலை சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு நல்ல நிலையில் உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26ம் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் ராமையன்பட்டி கிட்டங்கியிலிருந்து நாங்குநேரி இடைத்தேர்தலுக்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், வாக்குப்பதிவு  அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கவும் 10 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 10 கட்டுப்பாட்டு கருவிகள், 10 வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் எடுக்கப்பட்டு,  பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கருவிகள்  வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்படமாட்டாது.

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல் குலுக்கல் ஆன்லைனில் கடந்த 3ம் தேதி நடந்தது. கடந்த 10ம் தேதி இரண்டாம் கட்ட குலுக்கல் நடந்தது.  இந்த செயல்முறைகள்  அனைத்தும் ‘இஎம்எஸ்’’ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு  வேட்பாளர், வேட்பாளர்களின் தலைமை முகவர்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களின் விபரம் வழங்கப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  கையாளுவது குறித்து பயிற்சிக்காக எடுக்கப்பட்ட 30 இயந்திரங்கள் குறித்து தவறான வதந்திகள் மற்றும் பொய் புகார்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்தப் புகார்கள் முற்றிலும் தவறானவை. வாக்குப்பதிவு இயந்திரங்கள் நாங்குநேரி தாலுகா  அலுவலகத்தில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம்  கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த அறைக்கு ஆயதம் ஏந்திய காவலர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இவ்வாறு தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

Tags : Training Machines, Voting, Nonganari Constituency, Machines, Election Officer
× RELATED தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி...