நாங்குநேரியில் அதிமுக எதிர்கொள்ளும் சவால்களும்... சமாளிப்புகளும்: கேள்விகளால் துளைத்தெடுக்கும் மக்கள்

நாங்குநேரி இடைத்தேர்தல் வரும் 21ஆம் தேதி நடக்க இருப்பதை ஒட்டி அதிமுகவினர் தங்களது நிர்வாகிகளை தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபடுத்தி வருகிறார்கள். முதலமைச்சர், துணை முதலமைச்சர் 10க்கும் மேற்பட்ட மூத்த அமைச்சர்கள், துணை ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பல்வேறு ஒன்றிய நிர்வாகிகள் என தேர்தல் பணியில் தொகுதி முழுவதும் சுற்றி வருகிறார்கள். சுமார் 40 வாக்குச்சாவடிகளுக்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து  வாக்குகள் சேகரித்து வருகிறார்கள். இந்நிலையில் நல்ல சாலைகள், குடிநீர், வீடுகள் என பொதுமக்களின் தேவைகள் அதிகமாக உள்ளது என்பதை பொதுமக்களின் நேரடி கருத்து பரிமாற்றங்கள் மூலம் அக் கட்சியினர் தற்போது தான் அறிந்து வருகிறார்கள்.

தேர்தல் நடைமுறைகள் செயல்பாட்டில் இருந்துவரும் இந்த நேரத்தில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் தேர்தல் முடிந்தவுடன் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்து தருவதாக உறுதி அளித்து கரும் முயற்சிக்குப் பின் வாக்களர்களிடையே அதிமுகவினர் நம்பிக்கையூட்டி வருகிறார்கள். கிராமங்களில் முகாமிட்டுள்ள அமைச்சர்களிடம் போதிய பஸ் வசதி இல்லாததால் மாணவர்கள், வெளியூர் செல்லும் பெண்கள் தனியார் பஸ்கள், வாடகை வாகனங்கள் மூலம் செல்ல வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். குடிநீர் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது. ரேசன் பொருட்கள் முழுமையாக கிடைப்பதில்லை. எந்த ஊருக்கும் தனியாக அரசு பஸ் இயக்குவதற்கு அரசு அனுமதி வழங்கியதில்லை. ஆனால் நெல்லை மற்றும் நாகர்கோவிலுக்கு மட்டும் தனி இடைநில்லா அரசு பேருந்துகள் சட்டவிரோதமாக இயக்கப்படுகிறது.

இதனால் இடையிலுள்ள ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் அரசு பஸ் சேவை கிடைக்காமல் 20 ஆண்டுகளுக்கு மேலாக அவதிப்பட்டு வருகிறார்கள். நெல்லை நாகர்கோவில் மார்க்கத்தில் நாங்குநேரி தொகுதிக்குட்பட்ட டக்கரம்மாள்புரத்திலிருந்து வள்ளியூர் வரையிலான நெடுஞ்சாலையோர ஊர்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கிராமங்கள் அரசு பஸ் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகிறார்கள். அதுபோல நெல்லை திசையன்விளை மார்க்கத்தில் அதிகமான இடைநில்லா அரசு பஸ்கள் அனுமதியின்றி இயக்கப்படுவதால் மன்னார்புரம், சங்கனான்குளம், சிவந்தியாபுரம், தெற்கு விஜயநாராயணம், பரப்பாடி, ஏமன்குளம் மற்றும் பல கிராமங்களில் பஸ் வசதி இருந்தும் அனுபவிக்க முடியவில்லையே என்ற அப்பகுதி மக்களின் ஏக்கம் இந்த தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிரான நிலையை எடுக்க கூடும் என வெளியூரிலிருந்து வந்த நிர்வாகிகள் தரப்பில் முணுமுணுக்கப்படுகிறது.

களக்காடு பகுதியில் கடம்போடு வாழ்வு கிராமத்தில் விதிகளை மீறி அமைக்கப்பட்ட கல் குவாரிகளை மூட வலியுறுத்தி அப்பகுதியினர் போராட்டம் நடத்தியும் மூட மறுத்தனர். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டது, சூறாவளியால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காமை, குளங்கள் கால்வாய்கள் முறையாக தூர்வாராமை, மானியங்கள் ரத்து போன்ற பாதிப்புகளும் வெளிப்படும் என ஆளும் தரப்பு அதிர்ச்சியுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் எங்களுக்கு வாக்களித்தால் விரைவில் சரி செய்து விடுகிறோம் என்ற சமாளிப்பு பதில்களும் இவ்வளவு நாட்களாக எங்கே போயிருந்தீர்கள் என்ற வாக்களர்களின் எதிர் கேள்விகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதற்கு விடை வரும் 24ம் தேதி  கிடைத்துவிடும் என்பதே உண்மை.

Related Stories: