முல்லைப் பெரியாற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உடல் 5 நாட்களுக்கு பிறகு மீட்பு

தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையம் முல்லை பெரியாற்று நீரில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் பிரவீனின் உடல் குண்டல் நாயக்கன்பட்டியில் சுமார் ஐந்து நாட்களுக்கு  பின்பு சடலமாக மீட்கப்பட்டது. உத்தமபாளையம் ஆர்.சி தெருவை சேர்ந்த மேத்யூ நிர்மலா தம்பதியின் மகன் பிரவீன். இவர் வீரபாண்டி அரசு கல்லுாரியில் பயின்று வருகிறார். இவர் கடந்த 10 தேதி தனது நண்பர்களுடன் உத்தமபாளையம் முல்லை பெரியாறு பகுதியில் குளிக்க சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார். இதையடுத்து, பிரவீனை தேடும் பணிகளை துரிதப்படுத்தக்கோரி அவருடைய உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்பணிக்காக முல்லை பெரியாறு அணையில் இருந்து ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீர் அளவு குறைத்து, பின்னர் அதிகரிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட தீயணைப்பு அலுவலர் மணிகண்டன் தலைமையில் உத்தமபாளையம் தீயணைப்பு துறை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபட்டனர். முல்லை பெரியாற்றில் பிரவீனை கடந்த 5 நாட்களாக தேடி வந்த நிலையில், 14 கி.மீ., ஆற்றில் அடித்து வரப்பட்ட பிரவீன் உடல், நேற்று தேனி அருகே குண்டல்நாயக்கன்பட்டி வீரபாண்டி இடையில் உள்ள ஆற்றங்கரையோரத்தில் புதர்செடியில் சிக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிரவீனின் உடலை மீட்ட தீயணைப்பு துறையினர் பிரேத பரிசோதனைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: