மூணாறு நிலச்சரிவில் மாயம்: 8 நாட்களாக வாலிபர் உடலை மீட்கவில்லை

மூணாறு: மூணாறில் லாக்காடு கேப் சாலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய வாலிபரின் உடல் 8 நாட்களாகியும் மீட்கப்படவில்லை. உடலை விரைந்து மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். மூணாறு அருகே லாக்காடு கேப் சாலையில்  சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி இப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. பாறைகள் உருண்டு வந்ததில் பணியில் ஈடுபட்டிருந்த டிப்பர் லாரி முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் இருவரை காணவில்லை. இந்நிலையில் 8ம் தேதி தீயணைப்பு வீரர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், இடுக்கி மாவட்ட ஏ.ஆர்  கேம்ப் ஊழியர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சாலை பணியாளர்கள் இருவரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது பாறைகளில் சிக்கி உயிரிழந்து காணப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த உதயன் (19) என்பவரின் உடலை மீட்டனர். கிருஷ்ணகிரி  பகுதியை சேர்ந்த தமிழரசன் உடல் இதுவரை கிடைக்கவில்லை. இவரது உடலை  தேடும் பணியில்  ஊழியர்கள் தற்பொழுது ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சாலை பணிகள் முற்றிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. மண்சரிவு ஏற்பட்ட பகுதியே பார்வையிட கேரள  மாநில பேரிடர் தடுப்பு நிபுணர்கள் நேற்று சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட வருவார்கள் என்று அறிவிப்பு வெளியானது. மேலும் நிபுணர் குழு இடத்தை பார்வையிட்டு மண்சரிவு ஏற்படும் காரணங்கள் குறித்த விபரங்களை கேரளா அரசிடம் தாக்கல் செய்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் நிபுணர் குழு வருகை தாமதமாகும் என்று நெடுஞ்சாலை துறை அதிகாரி ரெக்ஸ் கூறியுள்ளார். மேலும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தமிழரசனின் உடல் இதுவரை கிடைக்காததால் அவரது பெற்றோர் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர். நிபுணர் குழு விரைந்து வந்து தகவல்களை ஆராய வேண்டும் என்றும் உயிரிழந்த தமிழரசனின் உடலை மீட்க வேண்டும் என்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: