×

பெருமாநல்லூர் அருகே 500 ஆண்டு பழமையான சிலை கண்டுபிடிப்பு

அவிநாசி: திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே 500 ஆண்டு பழமையான சிலையை கிராம மக்கள் வழிபட்டு வருவதை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகே உள்ள காளிபாளையம் ஊராட்சிப்பகுதியில் ஐநூறு ஆண்டு காலம் பழமையான புள்ளச்சாமி என்றழைக்கப்படும் சாமி சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காளிபாளையம் பகுதியில் சுடுமண் சிற்பங்களுக்கு இடையே இந்த சிலை அமைந்துள்ளது. இந்த சிலையை அப்பகுதி கிராம மக்கள் பரம்பரையாக பாரம்பரியமாக வழிபாடு செய்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதிக்கு சென்ற வரலாற்று ஆய்வாளர்கள் புலவர் சுந்தர கணேசன் மற்றும் ரமேஷ்குமார் ஆகிய இருவரும் இச்சிலையை கண்டுமிகுந்த ஆச்சரியமடைந்தனர்.

இது குறித்து வீரராஜேந்திர தொல்லியல் ஆய்வு மைய செயலாளர் புலவர் நாகராச கணேஷ்குமார் கூறியதாவது: பொதுவாக இது போன்ற கற்சிலையானது குளங்களின் நீர்வளத்தை குறிக்கும் வகையில், அதன் குளக்கரையில் தான் அதிகமாக காணப்படுகின்றன. மேலும் இந்த சிலையானது தாய் தனது குழந்தையை இடுப்பில் வைத்திருப்பது போலவும், அந்தச்சிலையின் இருபுறமும் கன்றுடன் மாடு இருப்பது போல ஒரே கற்சிலையாக உள்ளதால், இதனை பிள்ளைசாமி என்றழைக்கப்பட்டு, நாளடைவில் மருவி வட்டார வழக்கில் புள்ளச்சாமி என்றழைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். இதுபோன்ற சிலைகள் பூலுவப்பட்டி நால்ரோடு சந்திப்பிலும், அவிநாசி அருகே ஒருகிராமத்திலும் உள்ளதாகவும் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Perumanallur Avinashi , Avinashi
× RELATED எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி...