சிறந்த சுற்றுலா தளமாக தேர்வு செய்யப்பட்ட தரங்கம்பாடி கடற்கரையின் அவல நிலை

தரங்கம்பாடி: நாகை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரை சீரழிந்து கிடப்பதால் தனி சுற்றுலா அலுவலர் நியமித்து கடற்கரையை சீரழிவிலிருந்து மீட்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தரங்கம்பாடி கடற்கரையில் கடந்த திமுக ஆட்சியின் போது அழகிய நடை பாதையும், பாரம்பரிய விளக்குகளும், சுற்றுலா பயணிகள் அமர்ந்து கடலை ரசிக்க அழகான இருக்கைகள் போடப்பட்டும், நடைபாதை இருபுறமும் மரங்கள் வளர்க்கபட்டும் அழகாக காட்சியளித்தன. சுற்றுலா பயணிகள் குப்பைகளை போடுவதற்காக 36 அழகிய குப்பை தொட்டிகளையும் அமைத்திருந்தனர். பாரம்பரிய முறையில் 48 மின்விளக்குகள் அமைக்கபட்டிருந்தன. ஆனால் இப்பொழுது அனைத்து மின் கம்பங்களிலும் விளக்குகள் எரியவில்லை. 16 மின் கம்பங்கள் மட்டுமே மின் கூண்டு உள்ளது. 32 மின் கம்பங்கள் விளக்குகள் உடைக்கப்பட்டு கிடக்கிறது. அதேபோல் 36 குப்பை தொட்டிகளில் ஒன்று மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. மீதமுள்ள 35 தொட்டிகள் உடைக்கபட்டு கிடக்கின்றன. கடற்கரை சீர்கெட்டு போவதற்கு தனி சுற்றுலா அலுவலர் இல்லாததும், மாவட்ட நிர்வாகத்தின் பாராமுகமே காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாவட்ட நிர்வாகம் உடனே தரங்கம்பாடி கடற்கரையில் முழு கவனம் செலுத்தி சீரழிவிலிருந்து மீட்டு சுற்றுலா பயணிகளுக்கு உதவிட வேண்டும் என்றும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது: வியாபாரி சுல்தான்: தரங்கம்பாடி கடற்கரை தான் நீண்ட அழகான கடற்கரை. தரங்கம்பாடி அகில இந்திய அளவில் சிறந்த சுற்றுலா தளமாக சான்றிதழும் பரிசும் பெற்றுள்ளது. ஆனால் அத்தகைய தரங்கம்பாடிக்கு தனி சுற்றுலா அலுவலரோ, அலுவலகமோ கிடையாது. பூம்புகார் சுற்றுலா அலுவலர் தான் தரங்கம்பாடியை கூடுதலாக கவனித்து வருகிறார். தரங்கம்பாடிக்கு உடனே தனி சுற்றுலா அலுவலரை நியமிக்க வேண்டும். இதுகுறித்து முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளோம் ஆனால் நடவடிக்கை எடுப்பதில் மெத்தனம் காட்டுகின்றனர்.

சத்தியா பொறையார்:

தரங்கம்பாடி கடற்ரையில் அழகாக அமைக்கபட்டிருந்த மின் விளக்குகளும், குப்பை தொட்டிகளும் உடைக்கபட்டிருப்பது என் போன்று தினமும் கடற்கரை செல்வோருக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தரங்கம்பாடிக்கு வருகின்றார்கள். அவர்கள் பார்வைக்கு தரங்கம்பாடி பரிதாபமாக தெரிகிறது. தரங்கம்பாடி நிலை அறிந்து முகம் சுழித்து செல்கின்றனர். சுற்றுலாத்துறை, காவல்துறை, வருவாய்துறை இணைந்து இதற்கு நிரந்தர முடிவு எடுக்க வேண்டும். கடற்கரை ஓரம் உள்ள விளக்குகள் எல்லாம் உடைக்கபட்டிருப்பதால் கடற்கரையே இருண்டு கிடக்கிறது. அகில இந்திய அளவில் சிறந்த சுற்றுலா தளமாக மத்திய அரசால் தேர்ந்தெடுக்கபட்டு பரிசும், சான்றிதழும் பெற்ற தரங்கம்பாடி கடற்ரைக்கு இந்த நிலையா என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது. தரங்கம்பாடிக்கு சுற்றுலா அலுவலகமும், சுற்றுலா அலுவலரும் மிக மிக அவசியம் என்று கூறினார்.

Related Stories: