பரமத்திவேலூர் அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மேற்கூரை இடிந்து விழுந்தது

பரமத்திவேலூர்: பரமத்திவேலூரை அடுத்துள்ள குப்பிச்சிபாளையம் அரசினர் உயர்நிலைப்பள்ளியில், வகுப்பறை மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவில் நேரத்தில் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரை அடுத்துள்ள குப்புச்சிபாளையத்தில் அரசிaனர் உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சுமார் 225 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நடுநிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. பத்தாம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்டுள்ள இப்பள்ளியில் போதிய அளவு வகுப்பறை கட்டிடங்கள் கட்டி தரப்படவில்லை. நடுநிலைப்பள்ளியாக இருக்கும் போது இருந்த வகுப்பறைகளிலேயே தற்போதும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதனால் மாணவர்கள் போதிய வகுப்பறை இல்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் தொடக்கப்பள்ளியும் இதே வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடத்தில் 7ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்பறை செயல்பட்டு வருகிறது. இந்த வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை நேற்று முன்தினம் நள்ளிரவு இடிந்து விழுந்துள்ளது. இதில் மாணவர்கள் அமரும் பென்ச், டெஸ்க்குகள் சேதமடைந்துள்ளது. நள்ளிரவில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் பாதிப்படைந்த கட்டடத்தில் செயல்பட்டு வந்த மாணவ மாணவிகளுக்கு வேறு வகுப்பறை இல்லாததால் மரத்தடியில் அமரவைத்து நேற்று ஆசிரியர்கள் பாடம் நடத்தினர்.

இது குறித்து முன்னாள் மாணவர் ஒருவர் கூறுகையில், பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் சேதமடைந்த நிலையில் உள்ளது. பத்தாம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் அரசு போதிய வகுப்பறை கட்டிடங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்காமல் உள்ளதால் மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் உடனடியாக இதனை கவனத்தில் கொண்டு போதிய வகுப்பறைக்கட்டிடங்கள் அமைத்து கொடுக்க வேண்டும் எனவும், தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: