ஆழியார் அணையில் காட்டு யானை உலா

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையில் இரவு நேரத்தில் உலா வந்த ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது. பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே உள்ள நவமலை மற்றும் சர்க்கார்பதி வனத்திலிருந்து அடிக்கடி யானைகள் வெளியேறி ரோட்டோரம் உலா வருவது தொடர்கிறது. அதிலும் கடந்த சில மாதங்களாக நவமலை வனப்பகுதியிலிருந்து வெளியேறி ஆழியார் அணைப்பகுதி மற்றும் குரங்கு அருவி, வால்பாறை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் சர்வசாதாரணமாக யானைகள் உலா வருவது வாடிக்கையாக உள்ளது.

நேற்று முன்தினம் இரவில், நவமலை வனத்திலிருந்து வெளியேறிய சுமார் 22 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை ஒன்று, ஜீரோ பாண்ட் பகுதியை கடந்து புளியங்கண்டி வழியாக ஆழியார் அணை நோக்கி சென்றது. வரும் வழியில் புளியங்கண்டி எனும் பகுதியில் உள்ள குடியிருப்பில் ஒரு வீட்டின் சுவற்றை உடைத்து சேதப்படுத்தியதுடன், அங்கிருந்த பொருட்களை சூறையாடியது. தொடர்ந்து அங்கிருந்து அருகே உள்ள ஆழியார் அணைப்பகுக்கு வந்த யானை சுற்றுலா பயணிகள் நடமாடும், அணையின் மேல் பகுதியில் அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தது. இதை பார்த்த ஊழியர்கள் சிலர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் அந்த யானை, அணையிலிருந்து வெளியேறி அறிவுத்திருக்கோயில் அருகே இடம்பெயர்ந்தது. முன்னதாக வால்பாறை ரோட்டில் யானை சென்ற போது அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்கள், தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விளக்கை அணைத்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற வனத்துறையினர் அணையருகே உலா வந்த காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். பலமணி நேர போராட்டத்திற்கு பிறகு, அந்த ஒன்றை ஆண் யானை, அடர்ந்த வனத்திற்குள் சென்றது. இருப்பினும், அணைப்பகுதியில் யானை வருவதை தடுக்க தொடர்ந்து வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: