×

தமிழகத்தில் பரவி வரும் டெங்கு காய்ச்சல்: குழுக்கள் அமைத்து 2 வாரத்தில் அறிக்கை...மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக டெங்கு காய்ச்சலின் பாதிப்பு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில்  அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. தமிழக அரசும், இதுபோன்ற மர்மக் காய்ச்சலை தடுக்க அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும், காய்ச்சலுக்கு என தனி வார்டு அமைத்து தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசு  மருத்துவமனைகள் மட்டுமன்றி, தனியார் மருத்துவமனைகளிலும் ஏராளமானோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

பாதிக்கப்பட்டவார்கள் ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளில்  புறநோயாளியாக சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. டெங்கு தாக்கம் இருப்பவர்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்டவர்கள் டெங்கு  உள்ளிட்ட மர்ம காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்றுவருவதாக கூறப்படுகிறது.

நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மர்ம காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் கடந்த சில நாட்களாக பலர் மர்மமான முறையில் இறந்து  வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று காலை 11 மணிக்கு தமிழக தலைமை செயலாளர் சண்முகம் வீடியோ கான்பரன்சிங் மூலம் அனைத்து கலெக்டர்களுடன் அவசர ஆலோசனை  நடத்தினார். அப்போது, “தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு மருத்துவமனைகளில் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருக்க வேண்டும், கூடுதல் மருந்துகளை கையிருப்பு வைத்திருக்க வேண்டும். நோய் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளை கண்டறிந்து சிறப்பு மருத்துவ குழுக்களை அனுப்பி வைத்து  நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கொசு உற்பத்தியை தடுக்க பொதுமக்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக வருகிற வடகிழக்கு பருவ மழை காலத்துக்கு முன்னதாக இதுபோன்ற நோய்  எதிர்ப்பு நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வலியுறுத்த வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த குழுக்கள் அமைத்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள் என மண்டல வாரியாக  குழுக்கள் அமைத்து கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களிலும் தற்காலிக பணியாளர்கள் நியமித்து கொசு ஒழிப்பு பணியில் தீவிரம் காட்ட வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. 


Tags : Tamil Nadu ,Groups ,Govt , Dengue fever spreading in Tamil Nadu: Govt.
× RELATED ஜெய்பீம் பட உண்மை சம்பவத்தில்...