காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை காரணமாக கர்நாடக அணைகளிலிருந்து வினாடிக்கு 20,500 கனஅடி தண்ணீர் திறப்பு

பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 20 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையின் காரணமாக காவிரியில் நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணை தனது முழு கொள்ளளவான 124 அடியை எட்டியுள்ளது. தொடர்ந்து, அணையின் பாதுகாப்பு கருதி அந்த அணையின் இருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கனஅடி நீரானது அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அதேபோல கபினி அணைக்கு வரும் நீர்வரத்தும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. முழு கொள்ளளவான 84 அடியில், தற்போது கபினி அணையின் நீர்மட்டம் 83.5 அடியை கடந்துள்ளது.

இதனால் அந்த அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீரானது திறந்துவிடப்படவுள்ளது. இதன் காரணமாக காவிரியில் வினாடிக்கு 20 ஆயிரத்து 500 கனஅடி தண்ணீரானது தற்போது திறந்து விடப்படுகிறது. இந்த நீரானது அடுத்த 2 நாட்களுக்குள் தமிழக கர்நாடக எல்லையான பிலுகுண்டுலுவை வந்தடையும். அவ்வாறு அந்த நீர் வந்தடையும் பட்சத்தில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் படிப்படியாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று காலை 8 மணி நேரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 6 ஆயிரத்து 594 அடியாக உள்ளது. எனவே கர்நாடக பகுதியில் பெய்து வரும் கனமழையின் காரணமாக அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனை தொடர்ந்து இந்த நீர்திறப்பானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: