வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான அறிகுறியாக சென்னை மற்றும் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று 2 வது நாளாக காலையில் இருந்து பலத்த மழை பெய்து வருகிறது. கீழ்வேளூர், திருமருகல், கீழையூர், திருக்குவளை, தலைஞாயிறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்துவருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சம்பா சாகுபடி பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இந்த மழை பேருதவியாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நள்ளிரவு முதல் விடியவிடிய பலத்த மழை கொட்டியது. இதனால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இன்று காலையிலும் மழை தூறியது. இதேபோல் நீலாம்பூண்டி, வளத்தி, மேல்மலையனூர், நாட்டார்மங்கலம் மற்றும் ஆலம்பூண்டி பகுதியிலும் நேற்று காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன் நீர்நிலைகளுக்கும் நீர்வரத்தொடங்கி பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுச்சேரியின்  பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இன்றுகாலையிலும்  பலத்த மழை பெய்து வருவதால் தெருக்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. நெல்லித்தோப்பு , கோரிமேடு , முத்தியால்பேட்டை உள்ளிட்ட நகர பகுதிகளிலும் , வில்லியனூர், திருபுவனை, மதகடிபட்டு, பாகூர், காலப்பட்டு  உள்ளிட்ட கிராமப்பகுதிகளிலும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Related Stories: