உலகெங்கும் அணு ஆயுதங்களை முற்றிலுமாக நீக்க அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்: இந்தியாவுக்கான ஐ.நா. துாதர் பங்கஜ் சர்மா பேச்சு

நியூயார்க்: பயங்கரவாதத்தை தடுக்காமல், அணு ஆயுதங்கள் மூலம் மற்றவர்களை மிரட்டும் போக்கு அதிகரித்து வருகிறது என ஐ.நா கூட்டத்தில் இந்தியா தெரிவித்துள்ளது. ஐ.நா.,வின் ஆயுதக் குறைப்பு தொடர்பான மாநாடு, அமெரிக்காவின்  நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடந்தது. இதில், இந்தியா சார்பில், ஐ.நா.,வுக்கான துாதர் பங்கஜ் சர்மா பங்கேற்று பேசினார். அப்போது, உலகின் பாதுகாப்பு ஆபத்தான நிலையிலேயே உள்ளது. ஆயுதக் குறைப்பு தொடர்பாக பல  ஒப்பந்தங்கள் செய்யப்பட்டாலும், அவை தற்போது காலாவதியாகி விட்டன என்றார்.

 பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடு, எல்லை தாண்டி தாக்குதல் நடத்தி வருகிறது. அதை தடுத்து நிறுத்தாமல், ஆபத்தின் எல்லை வரை செல்லும் வகையில், எங்களிடம் அணு ஆயுதங்கள் உள்ளது என்று மிரட்டல் விடுக்கிறது என  பாகிஸ்தானை மறைமுகமாக சாடினார். இந்தப் போக்கு அதிகரிப்பது ஆபத்தானது. ஆனால், இதை தடுத்து நிறுத்தாமல், ஆயுதக் குறைப்பை வலியுறுத்தாமல், ஐ.நா.,வின் இந்த அமைப்பு மவுனியாக உள்ளது வருத்தமளிக்கிறது என்றார்.

தற்போதும் எங்களுக்கு ஒரு நம்பிக்கை உள்ளது. பேச்சு மற்றும் ஒத்துழைப்பு மூலம், எந்தப் பிரச்னைக்கும் தீர்வு காண முடியும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.கடந்த, 2006-ம் ஆண்டில், ஐ.நா. பொது சபையில், அணு ஆயுதக் குறைப்பு தொடர்பாக, ஒரு செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் அடிப்படையில், உலகெங்கும் அணு ஆயுதங்களை குறைக்க, முற்றிலுமாக நீக்க, அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் பங்கஜ் சர்மா தெரிவித்தார்.

Related Stories: