வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை 3 நாளில் முடிக்க கெடு: மாநகராட்சி ஆணையர் உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழையையொட்டி, மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியை 3 நாளில் முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கையாக சென்னையில் உள்ள மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த கூட்டத்தில் சென்னை மாநகராட்சி பகுதிகளில் அனைத்து வடிகால்களையும் பொறியாளர்கள் ஆய்வு செய்து எந்தெந்த வடிகால்களை தூர்வார  வேண்டும் என்பது தொடர்பாக அறிக்கை அளிக்க அறிவுறுத்தப்பட்டது. இதன் அடிப்படையில், கால்வாய்கள் தூர்வாரும் பணிக்கான நிர்வாக அனுமதியை வட்டார துணை ஆணையர்களே வழங்குவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் மழைநீர் வடிகாலில் நீர் சேரும் இடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் முறையாக ஆய்வு செய்து தூர்வார வேண்டும் என்றும், இந்த பணிகளை ஜி.ஐ.எஸ் முறையில் புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.  தூர்வாரும் கழிவுகளை குப்பை கிடங்கில் அதற்கென தனியாக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில்தான் கொட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.  

இந்நிலையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் ஆணையர் பிரகாஷ் தலைமையில் நேற்று நடந்தது. இதில் பணிகள் துறை துணை ஆணையர் கோவிந்தராவ், வட்டார துறை ஆணையர்கள், ஆல்பி ஜான் வர்கீஸ், பி.என்.ஸ்ரீதர், ஆகாஷ், முதன்மை தலைமை பொறியாளர் புகழேந்தி, தலைமை பொறியாளர்கள் நந்தகுமார், துரைசாமி உள்ளிட்ட கண்காணிப்பு பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 7265 இடங்களில் 1636 கிலோ மீட்டருக்கு வடிகால்கள் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் 3598 இடங்களில் சிறிய பணிகளும், 10 ஆயிரத்து 346 மனித நுழைவாயில்களும் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும், இதற்காக ரூ.35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அனைத்து பணிகளையும் 3 நாட்களில் முடிக்க வேண்டும் என்று ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டார்.

5 பணியாளர்கள்

பருவமழை காலங்களில் மழைநீர் வடிகால் பணியை செய்த ஒப்பந்ததாரர்கள் ஒவ்வொரு வார்டுக்கும் 5 பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். இவர்கள் பருவமழை காலங்களில் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து  பல்வேறு பணிகளில் ஈடுபட வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: