×

ஏழுமலையான் கோயில் உண்டியலில் 2 கோடி வைரக்கற்கள் பதித்த தங்க ஆபரணம் காணிக்கை

திருமலை: ஏழுமலையான் கோயில் உண்டியலில் வைரக்கற்கள் பதிக்கப்பட்ட 2 கோடி மதிப்புள்ள தங்க ஆபரணம் காணிக்கையாக கிடைத்தது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் உண்டியலில் தங்கமாகவும், வெள்ளியாகவும், பணமாகவும் தங்களது வேண்டுதலுக்கு ஏற்ப காணிக்கை செலுத்தி வருகின்றனர். அவ்வாறு சாதாரண நாட்களில் ₹2 கோடி முதல் 3 கோடி வரையிலும் கூட்டம் அதிகமாக உள்ள மற்றும் முக்கிய உற்சவ நாட்களில் 3 கோடி முதல் 4 கோடி வரையிலும் பக்தர்கள் காணிக்கை செலுத்துகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டபோது 4 கிலோ எடையில் தங்கத்தால் செய்யப்பட்ட வைரக்கற்கள் பதித்த 2 கோடி மதிப்புள்ள ஆபரணத்தை காணிக்கையாக செலுத்தி இருப்பது தெரியவந்தது.

ஏழுமலையானுக்கு ஆபரணங்களை காணிக்கையாக செலுத்த விரும்பும் பக்தர்கள் முன்கூட்டியே தேவஸ்தானத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவித்தால் அவர்கள் சுவாமிக்கு அணிவிக்கப்படும் ஆபரணம் இந்த அளவில் இருக்க வேண்டும் என்பதற்கான விவரங்களை வழங்குவார்கள். தேவஸ்தானம் வழங்கிய விவரங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட ஆபரணங்கள் மட்டுமே பக்தர்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்படும். ஆனால் தேவஸ்தானத்திடம் தகவல் தெரிவிக்காமல் தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்படும் நகைகள் உண்டியலில் செலுத்த அறிவுறுத்தப்படும். அவ்வாறு செலுத்தப்பட்ட ஆபரணம் இது என்பதும், இதுபோல் உண்டியலில் செலுத்தப்படும் ஆபரணத்தை கரைத்து தங்க கட்டிகளாக மாற்றி பயன்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Tags : Ezumalayan temple ,Ezhumaliyan Temple , Ezhumaliyan Temple, Undiyyil, Gold Ornament
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில்...